அகிரா (Japanese, 1988)

Sunday, December 7, 2014






அனிமேஷன் திரைப்படங்கள் உலகெங்கிலும் குழந்தைகளுக்கானவை மட்டுமே என்றொரு பொது பார்வை உள்ளது. அப்பார்வை ஓரளவுக்கு சரியே என்பதை மறுக்க முடியாது. பெரும்பான்மையாய் இவ்வகைப் படங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக அவர்களின் உலகினை ஒட்டிய கதைக்களங்களை அல்லது அவர்களுக்கு மிகப் பிரியமான கனவுறு புனைவுகளை (fantasy)  மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. காமிகஸ் எனப்படும் படக்கதைகளை அடியொற்றி எடுக்கப்படும் திரைப்படங்கள் உலகெங்கிலும் பெருத்த வரவேற்பை பெறுகின்றன. ஹாலிவுட்டில் மார்வெல் படக்கதைகள் (Marvel Comics) எண்ணற்ற (அனிமேஷன் அல்லாத) திரைப்படங்களாக வெளிவந்து வசூல் சாதனைகளை படைத்துள்ளன என்பதும் நாம் நன்கு அறிந்ததே. இருப்பினும் இந்த படக்கதைகளுக்கெல்லாம் முன்னோடியாகவும் ஊற்றுக் கண்ணாகவும் இருந்தது ஒரு வகையில் ஜப்பானிய படக்கதைகள் தான். அதிலும் குறிப்பாக ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட மங்கா படக்கதைகள் (Manga Comics) உலக பிரசித்தி பெற்றவை.

ஹாலிவுட் தனது உலகளாவிய சந்தையை பயன்படுத்தி அதிக பொருட்செலவில் குழந்தைகளுக்கென எடுப்பதாக சொல்லப்படும் பல படங்களில் அமெரிக்க தேசிய கருத்துருவாக்கம் (American Nationalism) ஊடிழையாக பின்னப்பட்ட்டிருப்படதை ஆழ்ந்த திரை வாசிப்பின் மூலம் நாம் அறிய வரலாம்.பேலும் அவை ஒரே விதமாக ஆக்‌ஷன் திரைப்படங்களாக இருப்பினும் அவற்றின் அடிநாதமாக அமெரிக்க தனிமுதல் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். உலகம் எதிர்கொள்ளும் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வும் விடிவும் அமெரிக்காவிடம் மட்டுமே உண்டு எனும் மாயையை அத்திரைப்பிரதிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி இளைய தலைமுறையினரின் மனங்களில் வலுவூட்டப்படுகின்றது.



மங்கா நாம் நினைப்பதைப் போல படக்கதைகளை வெளியிடும் ஒரு நிறுவனம் அல்ல. மாறாக மங்கா எனும் பதம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானியர்களால் அல்லது ஜப்பானிய மொழியில், தமக்கென ஒரு ஓவிய பாணியை வளர்த்தெடுத்துக் கொண்ட ஒரு பாணியையே குறிக்கிறது. இப்படக்கதைகளின் தோற்றுவாயாக ஜப்பானாக இருப்பினும் அவற்றின் பாதிப்பில் சீனா, கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் படக்கதைகள் உருவாகின. போலவே பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் கூட படக்கதைகள் உருவாகின. நவீன மங்காவின் வரலாறு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிகார வீச்சுக்கு ஜப்பான் கட்டுப்பட்டிருந்த காலத்திலிருந்து (1945-52) துவங்குகிறது. அந்த காலகட்டத்தில் தான் ஜப்பானியர்களுக்கு அமேரிக்காவின் மார்வெல் படக்கதைகள் அறிமுகமாகியிருந்தன. எனவே கணிசமான தாக்கத்தை அவை உள்நாட்டில் தயாரான மங்கா படக்கதைகளில் ஏற்படுத்தின. 



ஜப்பானில் படக்கதைகள் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினராலும் படிக்கப்படுபவை. மேலும் சினிமாவைப் போல அப்படக்கதைகள்- சாகசம், மீபுனைவு, புதிர் கதைகள், மர்மக் கதைகள், அறிவியல் புனைக் கதைகள், அமானுஷக் கதைகள், அரசியல் புனைவுகள், குடும்பக் கதைகள் என- எல்லா வகைப்பாடுகளிலும் வெளியாகும். எனவே பெயர்தான் படக்கதைகளேயொழிய அக்கதைகளில் அத்தனை சாரம்சங்களுக்கும் இடமுண்டு. 1960ல் முதல் மங்கா படக்கதை திரையுருவம் பெற்றது. இவ்வளவு முன்னரே இதன் துவக்கம் இருந்தது எனினும் 1980 வரையிலும் வெளியான அனிமேஷன் படங்களின் எண்ணிக்கை மிக சொற்பமே. மொத்தம் 12 படங்கள் வெளியாகியிருந்தன. அதில் 80வது வருடம் மட்டும் ஐந்து படங்கள். ஆனால் இந்த நிலை எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து மாறத் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை வருடந்தோறும் கணிசமான அனிமேஷன் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகின்றன. இவை தவிர மங்கா படக்கதைகள் முழுநீள திரைப்படங்களாகவும் தொடர்ந்து வெளிவருகின்றன. இவ்வகைக் கதைகள் ஒருவைகையில் அறிவியற் புனைக்கதைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன என உறுதியாக சொல்லலாம். அறுபதுகளில் வெளியான மங்கா அனிமேஷன் படங்கள் கூட அறிவியற் புனைக்கதைகளே.






இவ்வகை படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு படைப்பு 1988ல் கட்சுஹிரோ ஒடாமோ (Katsuhiro Otomo) இயக்கத்தில் வெளியான அகிரா (Akira) அனிமேஷன் திரைப்படத்தைச் சொல்லலாம். இத்திரைப்படம் அனிமேஷன் உருவாக்கத்தில் ஒரு முன்னோடியாகவும் அந்த காலகட்டத்தின் அனிமேஷன் துறையின் அடுத்தகட்ட நகர்வின் துவக்கப் புள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைவடிவின் மூலமான அகிரா மங்கா படக்கதையாக 1982ல் வெளியானது. இப்படத்தின் சிறப்பம்சம் அகிராவின் மூல வடிவான படக்கதையை எழுதி அதற்கு ஓவியங்களையும் வரைந்தவர் (ஜப்பானில் இவர்கள் மங்காகா என அழைக்கப்படுகின்றனர்) திரைப்படத்தின் இயக்குனர் ஒடமா தான். 1973 ஆம் வருடம் முதலே அவர் மங்கா ஓவியராக தனது படைப்புலக வாழ்வைத் துவங்கினார். சிறிதும் பெரிதுமாக அவர் எண்ணற்ற சிறுகதைகளுக்கு மங்கா வடிவம் கொடுத்தி வந்தார்.

தனது முதல் அறிவியல் புனைக் கதை மங்கா முயற்சியை 1979 ஆம் ஆண்டு Fireball என்ற தலைப்பில் துவங்கினார். அவர் அந்த மங்காவை முடிக்கவே இல்லை என்ற போதிலும் அவர் அவ்வனுபவத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டார். 1982ல் அவர் முதன் முதலில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் கதாப்பாத்திர வடிவமைபாளராக பணிபுரிந்தார். அதே வருடம் அவர், இன்றளவும் அவரது மகத்தான சாதனையாக கருதப்படும் மங்காவான அகிராவை எழுதத் துவங்கினார். அது 1982 முதல் 1990 வரை சித்திரத் தொடராக வெளியானது. ஆறு பகுதிகலாக வெளியான அந்த மங்கா அவரது வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது. அகிரா மங்கா தொடருக்கான படங்களை வரைந்தும் (Illustrator) இவரே. 1988 ல் தனது கதையின் ஒரு பகுதியை தேர்ந்து, ஏறத்தாழ 2000 பக்கங்களுக்கும் மேலான அகிரா மங்காவை சுருக்கி அதற்கு திரைக்கதை எழுதி, அகிரா என்ற பெயரிலேயே இயக்கவும் செய்தார். ஒரு இயக்குனராக இது அவரது முதல் திரைப்படமும் கூட.

1988ஆம் ஆண்டு நடைபெறும் மூன்றாவது உலகப் போரின் இறுதியில் டோக்கியோ நகரம் முற்றிலும் அழிகின்றது. அகிராவின் கதைகளம் அதிலிருந்து முப்பத்தியோரு ஆண்டுகள் கழித்து 2019ல் நவ டோக்கியோ நகரில்( Neo Tokyo) துவங்குகிறது. கதியின் துவக்கம் இரண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்குள் இருக்கும் போட்டி, அதன் வழியே அவர்களுக்குள் மூளும் விரோதம் எனும் புள்ளியிலிருந்து துவங்குகிறது. ஷொட்டாரோ கானடா (Shotaro Kaneda) ஒரு குழுவிற்கு தலைவனாக விளங்குகிறான். அவர்களது எதிரி குழுவைச் சேர்ந்தவர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து தொடுக்கும் தாக்குதலில் கானாவின் குழுவினனும் அவனது பால்ய நண்பனுமான டெட்ஸுவோ ஷீமா (Tetsuo Shima) காயமடைகிறான். அவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட காவலரின் விசாரணைக்கு ஏனையோர் உட்படுத்தப்படுகின்றனர். தொடரும் நிகழ்வுகள் அந்நகரில் நடக்கும் ரகசிய ராணுவ நடவடிக்கைகளையும், சுழலின் சுதந்திரமின்மையையும் எடுத்துக் காட்டுகின்றன.

இதற்கிடையே மருத்துவமனையில் ராணுவ தளபதியும், அரசின் ரகசிய ஆராய்ச்சிகளின் மேற்பார்வையாளராகவும் இருக்கும் தளபதி ஷிகிஷிமா ஆய்வாளரின் வழி சிகிச்சை பெறும் டெட்ஸுவோவின் குனநலன்கள் அகிராவினுடையதை ஒத்திருப்பதாக அறிய வருகின்றார். இவரது கதா பாத்திரம் மிகவும் கட்டுக்கோப்பானதாகவும் அதே வேளையில் துளியும் இரக்கமற்றதாகவும் முன் வைக்கப்படுகின்றது.

சிகிச்சை பெறும் டெட்ஸுவோ இளைமையிலேயே விடுதியில் வளர்ந்தவனாகவும், அனைவரின் எள்ளலுக்கு உள்ளாகுபவனாகவும், எப்போதும் கானடாவின் உதவியாலேயே இக்கட்டுகளினின்று தப்பிப்பவனாகவும் இருக்கிறான். அவனுக்கு இது ஒரு வகை தாழ்வு மனப்பான்மையையும், விளைவாக கானடாவின் மீது வெறுப்பையும் உண்டாக்குகிறது. தனிச்சையாக இருப்பதற்கு அவன் முயலும் தருணங்கள் தோறும் ஏதாவது பிரச்சனை ஏற்பட முடிவில் கானடாவின் தலையீட்டினாலேயே காப்பாற்றப்படுவது அவனுக்கு மிகுந்த மனக்கசப்பை தருகின்றது.

படத்திற்கு தலைப்பைத் தரும் கதாப்பாத்திரமான அகிரா குறித்த தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே, பார்வையாளருக்கு தெரிவிக்கப்படாமல், வெகுநேரம் வரை இருக்கிறது. திரைக்கதையின் போக்கே ஒவ்வொரு கட்டத்திலும் அகிராவின் முன் கதையை நமக்கு அறிவிக்கின்றது. எண்பதுகளில் ஜப்பான் அரசு செய்திடும் ரகசிய அறிவியல் ஆராய்ச்சிகளில் ஏற்படுகின்ற பெரும் தவற்றினால் அதில் ஈடுபடுத்தப்பட்ட  ஒரு சோதனை உயிரான (Test Subject ) அகிரா அபரிவிதமான சக்தி பெற்றவனாகவும் தான் பெற்ற சக்தியை கட்டுப்படுத்த இயலாதவனாகவும் ஆகின்றான். விழைவாக ஏற்படும் பெரும் பிரளய வெடிப்பில் டோக்கியோ நகரம் அழிந்ததும் நமக்கு மற்றொரு பாத்திரமான அகிராவைப் போன்ற இன்னுமொரு பரிசோதனை உயிரான கியோகோ மூலம் தெரிய வருகிறது. மேலும் நவ டோக்கியோவில் அகிராவின் எஞ்சியிருக்கும் தகவல்களும் மீதமிருக்கும் அவனுடைய பாதுகாக்கப்படும் மாதிரிகளுமாக ஆய்வு தொடர்கிறது.

இதற்கிடையில் டெட்ஸுவோவை தனது சக தோழி கேயுடன் கானடா மீட்க கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறான். அதே  வேளையில் தாழ்வு மனப்பான்மையாலும், இயலாமையாலும் ஒடுங்கிப் போயிருந்த டெட்ஸுவோவின் சுயம், தன்னிடமுள்ள அபரிவிதமான வலிமைகள் குறித்து கொஞ்சம் கொஞ்சமாய் அறிய வர பெரும் மார்றத்துக்குள்ளாகிறது. தேக்கி வைத்திருந்த ஏக்கங்களை யாவும் புதிதாய் கிடைத்த இப்பெருவலிமை அவனுள்அகங்காரத்தினை வளர்த்தெடுக்கிறது. நகரத்தில் அகிராவின் கதையை அறைகுறையாய் தெரிந்து வைத்திருக்கும் கூட்டமொன்று அவனை அரசின் அடக்கு முறைகளினின்று தங்களை மீட்க அவன் நிச்சயம் வருவான் என மிகுந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு காத்திருக்கிறது. அவர்கள் முன்னிலையில், புதிதாய் கட்டவிழ்ந்திருக்கும் டெட்ஸுவோவினை அடக்க ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அதனை அவன் அனாயசமாய் எதிர்கொள்வதையும் காணும் அக்கூட்டத்தினர் அவனை அகிராவென்று ஆர்ப்பரிக்கத் துவங்குகின்றனர். 

            

முன்னரே அகிராவின் பேராற்றலையும் அதன் எதிர்விளைவையும் கண்கூடாகக் கண்ட கியோகோ டெட்ஸுவோவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தவளாக இருகிறாள். அவள் தனது சக்தியை பயன்படுத்தி கானடாவின் தோழி கேயை தனது ஊடகமாக பயன்படுத்தி அவள் வழியாக கானடா சூழலில் இக்கட்டைப் புரிந்து கொள்ளவும், உடனடியாக டெட்ஸுவோவை தடுத்து நிறுத்துவதுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறாள்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கேன உருவாகிவரும் பிரத்தியேக மைதானமொன்றின் கீழாக அகிரா பாதுகாக்கப் படுவதை கேள்வியுறும் டெட்ஸுவோ, யாராலும் தடுக்க முடியாதவனாய், அங்கே விரைகிறான். தளபதி ஷிகிஷிமாவின் வாயிலாக அவ்விடத்தில் பாதுகாக்கப்படுவது அகிரா அல்ல, மாறாக அழிந்த அவனது உயிரியல் மீதங்களே என்பதையும் அறிகின்றான். ஆயினும் அவனுள் பொங்கும் பெரும்சக்தி அவனது கட்டுப்படுத்த முடியாததாய், அவனை ஆட்கொள்வதாய் மாறுகிறது. இவ்வளவு நேரம் திடீர் சக்தியால் தன்னிலை மறந்திருந்த டெட்ஸுவொ விழித்து கொண்டவனாய் கானடாவை நோக்கி உதவுமாறு கூக்குரலிடுகின்றான். அதற்குள் காலம் கடந்து விடுகின்றது. முன்பொருமுறை அகிராவின் வழியே டோக்கியோ நகரை நிர்மூலமாக்கிய அப்பிரளய சக்தி இம்முறை டெட்ஸுவோவை மட்டும் பலி கொள்கிறது. நவ டோக்கியோ ஒரு மாபெரும் அழிவினின்று தப்புகிறது. கானடா தனது என்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதோடு படம் நிறைவுறுகிறது. 




அகிரா திரைப்பிரதியின் கதை,வளர்ந்து வரும் மனித குலம் கற்பனை செய்திருக்காத அளவிற்கு அறிவியல் துறையின் அசுர வளர்ச்சியால் ஒரு பக்கம் பல நலன்கள் விளைகின்ற போதிலும் அதில் உறைந்திருக்கும் ஆபத்துக்களை கொண்ட மறுபக்கத்தினை தனது புனைவின் மூலமாக முன்வைக்கிறது. மேலும் இக்கதை டிஸ்டோபியன் வகை கதைக்களத்தினுள் இயங்குவதால், அரசுகள் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு ஆபத்தான ஆய்வுகளை முன்னெடுக்கின்றன என்பதைனையும், இதனால் எதிர்காலத்தில் ஆபாயகரமான எதிர்விளைவுகள் ஏற்படின் அது பலி கொள்ளப் போவது மக்களைத் தான் எனும் உண்மையை சொல்கிறது. மேலும் சனநாயக முறையில் இருக்கும் அரசுகள் கூட எவ்வாறு தமது அதிகாரத்தை பிரயோகித்து மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடும் சாத்தியங்களை கொண்டுள்ளன என்பதையும் எடுத்து காட்டுகிறது. கதையின் ஊடிழையாக மாறி வரும் ஜப்பானிய கலாச்சாரம் குறித்த கவலையும் பிரதிபலிக்க்கபடுகிறது.

அகிரா முன்வைக்கும் ஜப்பானிய வாழ்க்கை இயந்திரத்தனாமானதாகவும், குடும்ப அமைப்பை உதறித் தள்ளுவதாகவும் இருக்கிறது. தன்னலம் மிக்க மனிதர்களையும் முன்வைக்கிறது. இது ஐம்பதுகளில் ஒசுவின் திரைப்படங்கள் வழியாக நாம் அறிய வரும் ஜப்பானிய வாழ்வியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருப்பதை நாம் உணரலாம். அதிக குடும்பச் சித்திரங்களும், கலாச்சார விழுமியங்களை உள்வாங்கிய ஒசு காலகட்டத்திய ஜப்பானிய திரைப்படங்கள் மெல்ல எழுபதுகளில் தமது சாயலை மாற்றிக் கொள்ளத் துவங்கின. சமகாலத்திய அந்நாட்டுத் திரைப்படங்கள் மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகளாலும், பல படைப்புகளில் அதிகமான பாலியல் காட்சிகளும் இடம்பெறுபவையாகவும் மாறிப் போயிருக்கின்றன. திரைப்படங்கள், அவற்றின் கருப்பொருள்களின் தேர்வு அப்பிராதியத்தில் ஏற்படும் சமூக,அரசியல் நடைமுறை மாற்றங்களை எப்போதுமே பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் தனது சரிந்து போன வரலாற்றை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து வெறியோடு உழைக்க ஆரம்பித்தது. நாளடைவில், உலகம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே, அது சரிவிலிருந்து மீண்டெழுந்து தன்னை மறுநிர்மாணம் செய்து கொண்டது. ஆயினும் ஜப்பானியர் தம் வாழ்வை இயந்திரமயமான ஒரு மீளவியலா சுழலில் ஒப்புவித்தனர். அதுவே அவர்கள் தமது தேசிய முன்னேற்றத்திற்கு தந்த விலை.

அகிரா திரைப்படம் திரைப்பட அனிமேஷன் கலை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கிறது. இப்படத்தைனை தொடர்ந்து வெளியான எண்ணற்ற திரைப்படங்களில் இப்படத்தின் பாதிப்பை பார்க்கலாம். 1999 இல் வெளியாகி உலகெங்கிலும் பெருத்த வரவேற்பைப் பெற்ற அறிவியற் புனைக்கதையான The Matrix திரைப்படத்தின் இயக்குனர்களன வாட்சௌஸ்கி சகோதரர்கள் தங்களின் படைப்பின் திரைஉருவாக்க மாதிரிகளாக கூறிய இரண்டு படைப்புகளில் ஒன்று அகிராவாகும். (மற்றொன்று 1995 இல் வெளியான Ghost in the Shell என்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமாகும்.) உலகின் தலை சிறந்த அனிமேஷன் திரைப்படங்களின் தரவரிசைப் பட்டியலில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தினை உறுதி செய்துள்ளது இப்படைப்பு. 

குறிப்பு: இக்கட்டுரையை வெளியிட்ட பேசாமொழி, மாற்றுத் திரைப்படங்களுக்கான இணைய இதழுக்கு நன்றி.     

    

நதியின் ருசி

Saturday, May 31, 2014







எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும்
நல்ல பழக்கமுள்ள சிறுமியொருத்தி
என்னிடம் கேட்டாள்
ஆத்துத் தண்ணி எம்மாமா ருசியாயிருக்கு?

நதி நகர்ந்து கொண்டேயிருப்பதால்
ருசியேரிக் கிடப்பதாய்ச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்
அப்ப நாமும் எதிலேயும் தங்காம
நகர்ந்தா வாழ்க்க ருசிக்கும்ல!

அவள் தலைகோதி புன்னகைத்தேன்.

நவ கல்வியியல் சிந்தனை

Sunday, February 23, 2014










மனித குலத்தில் ஒவ்வொரு தலமுறையின் தலையாய கடமையாய் இருப்பது தமது தலைமுறையின் அறிவினை, தாம் கற்றறிந்த செய்திகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே ஆகும். நாம் காலங்காலமாக இதற்கு கல்விச் சாலைகளையே பயன்படுத்துகிறோம். மேலும் பொதுவாக மனித வாழ்க்கை சிறக்க அறவியல் சிந்தனைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் இளவயதினருக்கு கற்றுக் கொடுக்க முற்படுகிறோம். ஆனால் அதனை நாம் அதிகாரத்தின் வழி நிறுவிட முயல்வதே கல்வியை, கற்கும் அனுபவத்தை இளம் பருவத்தினருக்கு கசப்பானதாக்குகிறது.

வெல்டன் அகதமி (Welton Academy) எனும் பாரம்பரியமிக்க, கண்டிப்பிற்கு பெயர் போன  பிரித்தானியப் பள்ளியில் புதிய ஆங்கில ஆசிரியராக வருகிறார் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஜான் கீட்டிங் (John Keating). மரபான கற்பித்தல் முறைமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான அவரது கற்பித்தல் அணுகுமுறை வழியாக மாணவரிடத்தில் பெரும் வரவேற்பையும், பள்ளியின் தலைமையாசிரியர் நோலனின் எதிர்ப்பையும் வந்த சில காலத்திலேயே சம்பாதிக்கிறார். இறுதியில் ஒரு மாணாவனின் தற்கொலைக்கு அவரே காரணமென குற்றஞ்சாட்டப்பட்டு பள்ளியை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

மாணவர்களுக்கு, ஒரு நல்ல ஆசிரியர் புத்தகங்களில் இருந்து அல்ல, மாறாக தன் இதயத்தினின்று கற்பிக்கிறார். கதையின் பிரதான பாத்திரமாக ஆசிரியர் கீட்டிங் இருப்பது போல தோன்றினாலும், திரைக்கதை அவருக்கும் பதின்ம பருவத்திலுள்ள அவரது மாணாவர்களுக்கும் இடையேயான உறவையே பின்தொடர்கிறது.மேலும் கல்விச் சாலைகளில் மொழிப் பாடங்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் பட்சமான இடத்தினையும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அறிவியல் துறை வாழ்க்கையை வளமாக்க பயன்படலாம். ஆயினும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள இன்றியமையாதது இலக்கியம் என்பதனை ஆணீத்தரமாக எடுத்துக் காட்டுகிறது இப்படம்.

படத்தில் பதின்ம வயது மாணவர்களாக பல இளைஞர்கள் திறம்பட தமது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் என்றால், மையப் பாத்திரமான ஆசிரியராக அதீத நேர்மறையான பாத்திரத்தில் மிகச் சிறப்பாக ராபின் வில்லியம்ஸ் (Robin Williams) நடித்திருப்பார். இதற்குப் பிறகான அவரது நடிப்புலக வாழ்க்கையில் அவர் இது போலவே நேர்மறையான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

Movie: Dead Poet Society (1989)
Language: English
Director : Peter Weir

துயரை கடத்தல் -Life is Beautiful

Friday, January 17, 2014

ஒரு நல்ல நகைச்சுவை என்பது பார்க்கும் போது சிரிக்கவும் பின்னர் நினைக்துப் பார்த்து அசைபோடும் போது அழவும் வைக்க வேண்டும் என்பார் சாப்ளின். சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையினரின் யூத ஒழிப்பு குறித்து எண்ணற்ற திரைப்படங்கள் வந்திருக்கும் போதிலும் அவற்றின் பொதுவான அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நகைச்சுவையின் வாயிலாக ஒரு மாபெரும் துன்பத்தை பதிவு செய்வதில் தனித்துவமான படைப்பாகிறது. “Life is Beautiful“ 
  
இத்தாலியில் ஒரு நகரத்தில் புத்தகக் கடை வத்திருக்கும் சாமானிய யூத இத்தாலியன் குய்டோ. அவன் தோரா எனும் பெண் மீது காதல் கொண்டு மணக்கிறான். அவர்களின் அன்பின் சாட்சியாய் அவர்களுக்கு பிறக்கும் மகன் ஜோஸ்வாவின் பிறந்தநாள் அன்று னிகழ்ந்து கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போர் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. குடும்பம் நாஜிக்களால் சிறைபிடிக்கப் பட்டு அவர்கள் சித்ரவதை கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். 

ஆண்களோடு இருக்கும் தன் மகனுக்கு சூழலின் கடுமையும் உண்மையின் கொடூரமும் தெரியாதவாறு ஒரு தந்திரம் செய்கிறான் குய்டோ. தனது அபாரமான கற்பனைத் திறனால் அங்கே நடப்பது எல்லாம் ஒரு பெரிய விளையாட்டு எனவும் அதில் வெல்பவருக்கு ஒரு ராணுவ டாங்க் பரிசாக வழங்கப்படும் என்றும் ஜோஸ்வாவை நம்பவைக்கிறான். இறுதிக் காட்சி மகனது பார்வையில் பெரிய நகைச்சுவையாகவும் பார்வையாளர்களுக்கோ உள்ளம் கிழிக்கும் துயராகவும் ஒரு சேர இருக்கும் அத்தருணத்தை கடப்பது அவ்வளவு எளிதல்ல.

இயக்குனர் ராபர்டோ பெனிக்னி அப்படத்தின் நாயகனாகவும் மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

Movie : Life is Beautiful (1997)
Language : Italian
Director : Roberto Benigni

சினிமா எனும் ரசவாதம் -Cinema Paradiso

Thursday, January 16, 2014


திரையரங்குகளில் சினிமா பார்ப்பது ஒரு சமூக நிகழ்வு. எல்லா மனிதர்களையும் அவர்தம் பேதங்களை மறந்து, இருளில் ஒளிரும் திரையின் முன்னே சில மணி நேரங்கள் இருக்கச் செய்வது சினிமா நிகழ்த்தும் மாயம். நமது பால்யத்தின் நினைவறைகளில் நிச்சயம் நமக்கு பிரியமான ஒரு திரையரங்கைக் குறித்த அனுபவம் ஒளிந்திருக்கும்.

இளமையில் ஒரு இத்தாலிய கிராமத்தில், ஒரு சிறுவனுக்கு அவ்வூரின் திரையரங்கில் ஆப்பரேட்டராக பணியாற்றும் Alfredo நண்பராகிறார். திரைப்படங்கள் அவர்களது நட்பினை இறுகக் கட்டுகிறது. கைகூடாத காதலோடு பதின்வயதில், அவரது சொற்படி அவன் தன் ஊரை விட்டு ரோம் நகருக்குச் செல்கிறான். முப்பது வருடங்கள் கழித்து வாழ்வின் பகடை அவனை ஒரு திரைப்பட இயக்குனராக்கியிருக்கிறது, ஆல்பெரேதோவின் மரண செய்தி அவனை மீண்டும் அவனை சொந்த ஊருக்கு வரவழைக்கிறது. மரண செய்தியை சொன்ன அவனது தோழி அவர் யாரென வினவ அவனது மனம் பின்னோக்கி ஞாபக நதியில் நீந்தத் துவங்கிகிறது. 

அதன் வழியே நட்பும் காதலும், இழப்பும் வலியும் நம் கண் முன்னே விரிகிறது. ஆல்பரேதோவிற்கு பிறகு பராமரிக்க ஆளின்றி அத்திரையரங்கம் இடிக்கப்படுகிறது. திரை அரங்கங்களுக்கும் ஒரு சினிமா ரசிகனுக்கும் உள்ள ஆத்மார்த்தமான காதல் தளும்பும் பிணைப்பை சொன்ன ஆகச் சிறந்த படம் நான் பார்த்த வரையில் இதுதான். உங்களுக்கு சினிமாவின் மீது காதலிருப்பின் இது உங்கள் மனதை விட்டு அகலாது, என்றும்.

Movie : Cinema Paradiso (1988)
Language : Italian
Director : Giuseppe Tornatore