நவ கல்வியியல் சிந்தனை

Sunday, February 23, 2014


மனித குலத்தில் ஒவ்வொரு தலமுறையின் தலையாய கடமையாய் இருப்பது தமது தலைமுறையின் அறிவினை, தாம் கற்றறிந்த செய்திகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே ஆகும். நாம் காலங்காலமாக இதற்கு கல்விச் சாலைகளையே பயன்படுத்துகிறோம். மேலும் பொதுவாக மனித வாழ்க்கை சிறக்க அறவியல் சிந்தனைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் இளவயதினருக்கு கற்றுக் கொடுக்க முற்படுகிறோம். ஆனால் அதனை நாம் அதிகாரத்தின் வழி நிறுவிட முயல்வதே கல்வியை, கற்கும் அனுபவத்தை இளம் பருவத்தினருக்கு கசப்பானதாக்குகிறது.

வெல்டன் அகதமி (Welton Academy) எனும் பாரம்பரியமிக்க, கண்டிப்பிற்கு பெயர் போன  பிரித்தானியப் பள்ளியில் புதிய ஆங்கில ஆசிரியராக வருகிறார் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஜான் கீட்டிங் (John Keating). மரபான கற்பித்தல் முறைமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான அவரது கற்பித்தல் அணுகுமுறை வழியாக மாணவரிடத்தில் பெரும் வரவேற்பையும், பள்ளியின் தலைமையாசிரியர் நோலனின் எதிர்ப்பையும் வந்த சில காலத்திலேயே சம்பாதிக்கிறார். இறுதியில் ஒரு மாணாவனின் தற்கொலைக்கு அவரே காரணமென குற்றஞ்சாட்டப்பட்டு பள்ளியை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

மாணவர்களுக்கு, ஒரு நல்ல ஆசிரியர் புத்தகங்களில் இருந்து அல்ல, மாறாக தன் இதயத்தினின்று கற்பிக்கிறார். கதையின் பிரதான பாத்திரமாக ஆசிரியர் கீட்டிங் இருப்பது போல தோன்றினாலும், திரைக்கதை அவருக்கும் பதின்ம பருவத்திலுள்ள அவரது மாணாவர்களுக்கும் இடையேயான உறவையே பின்தொடர்கிறது.மேலும் கல்விச் சாலைகளில் மொழிப் பாடங்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் பட்சமான இடத்தினையும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அறிவியல் துறை வாழ்க்கையை வளமாக்க பயன்படலாம். ஆயினும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள இன்றியமையாதது இலக்கியம் என்பதனை ஆணீத்தரமாக எடுத்துக் காட்டுகிறது இப்படம்.

படத்தில் பதின்ம வயது மாணவர்களாக பல இளைஞர்கள் திறம்பட தமது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் என்றால், மையப் பாத்திரமான ஆசிரியராக அதீத நேர்மறையான பாத்திரத்தில் மிகச் சிறப்பாக ராபின் வில்லியம்ஸ் (Robin Williams) நடித்திருப்பார். இதற்குப் பிறகான அவரது நடிப்புலக வாழ்க்கையில் அவர் இது போலவே நேர்மறையான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

Movie: Dead Poet Society (1989)
Language: English
Director : Peter Weir

No comments:

Post a Comment