கனவையுண்ணும் நதி

Tuesday, February 19, 2013




முன்னரே தோற்றவனும்
பின்னர் தோற்கவிருப்பவனும்
சந்தித்துக் கொண்டனர்
நதியிடை பாய்ந்த
பாலத்தின் நடை பாதையில்.

முன்னவன் மௌனித்திருக்க
பின்னவன் பேசிக் கொண்டேயிருந்தான்
தொகுப்பாளினி யுவதி போல்

கடிதங்கள் நிழற்படங்கள்
வாழ்த்து அட்டைகளில்
முத்தமிட்ட இதழ்களின் முத்திரைகள்
பிறக்கப் போவதாய் கனாக் கண்டிருக்கும்
மழலைக்கான கிங்கிணியென
யாவற்றையும் காட்டினான்

தன்னிலை மாறா முன்னவனோ
கழிந்த காலத்தில் இதைப் போலவே
தானுளரிய கதைகளை
விசிறியெறிந்த நதியை பார்த்தான்
இதழிலரும்பிய புன்னகையோடு

தோற்றவனிடம் தோற்பவன் காட்டிய
யாவும் போலொன்றை
முன்னொரு நாளில் விழுங்கிய நதியோ
தீரா பசியுடன் அசைவாடியது.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(18-02-13)
மின்னிதழுக்கு நன்றி.

புரியாத ஒன்று

Friday, February 15, 2013









என் விரலின் ரேகைகளை
பதிவு செய்யும்
நின் கன்னந்தழுவுமென்
ஒவ்வொரு வருடலும்

ஏதாவது சொல்லென
எனைத் துளைக்கும்
அவ்விழி மதில் தாண்டி
என்ன இருக்குமென தெரிவதில்லை
எத்தனை முறை முயன்றும்

தோளுரசுமுன் அருகாமையின் வெம்மையில்
வாஞ்சையாய் ஒடுங்கிக் கொள்ளுமென் உயிர்
நாய் குட்டியைப் போல்

இவைகளை மீறி என்னதான்
யாசிக்கின்றதென் சுயம்?

கண்டதும் கொண்டதும்

Thursday, February 14, 2013







மாளிகையின் மையத்தில்
ஆடத் துவங்குகிறாள் தாசி
வளைந்து நெளியுமவள் வளைகரங்களில்
பொங்கிப் பெருக்கெடுக்கிறது கடலலை
சிலும்புமவள் கேசத்தினின்று
சப்தித்து வீழ்கிறதோர் கருப்பு அருவி
தளைத்த இளமையுடன் திளைத்தாடுபவளின்
அங்கம் தின்னும் விழிகளோடு
மதுக்கோப்பை ஏந்திய கரங்கள்
ஆயிரமாயிரம் பூட்டுகளைத் திறந்திடும்
விழிச் சாவிகளிரண்டும்
அவள் வசம் பத்திரம்
தொலைத்தது அவளிதயப் பூட்டினை
மாத்திரம்.

குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (13-02-13)
மின்னிதழுக்கு நன்றி.

சிந்தையால் கேள்

Friday, February 1, 2013






ஓலமிடும் தரணியின்
துயர் துடைக்க
சிறியன் நான் என் செய்வேனென
திகைக்கிறாயா நண்பா?

ஒன்றுமில்லை
குருவியின் தலையில்
பனங்காய் சுமக்கத்
தேவையில்லை.

இயன்றதைச் செய்தாலே
இவ்வுலகம் பிழைத்திடும்.

கசக்கி எறிந்து வீணடிக்கும்
ஒவ்வொரு காகிததிலும்
ஒரு மரக் கிளையின்
கண்ணீர் துளியின்
பிசுபிசுப்பு உணர்.

விசிறியடிக்கும்
ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
பூமித் தாயின் மூச்சுக் குழாய்
அடைக்கிறது.
புரி!

நிறைய கனவு காண்
கள்ளமில்லா காற்று
மாசில்லா நீர்நிலை
கருஞ்சாலை நதியின்
கரையெங்கும்
நிழல் காய்க்கும் மரங்கள்…

கனவோடு நில்லாதே
காரியம் கெடும்.
முயற்சி வடம் பிடித்து
கனவுத் தேர் இழு !

விதைகளைப் பதியனிடு
எதிர்காலம் விருட்சமாகும்.

உன் சந்ததியின்
உயிர் துடிப்பை
தளிர்களின் சலசலப்பில்
கேள் !

தோழா !
போகிக்குக் கொளுத்திட
குப்பைகள்
மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
மனவீட்டின் கொல்லையில்…

பின் எதற்கு தெருக்களில்?
சிந்திப்பாய் …!


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (01-02-13)
மின்னிதழுக்கு நன்றி.