துயரை கடத்தல் -Life is Beautiful

Friday, January 17, 2014

ஒரு நல்ல நகைச்சுவை என்பது பார்க்கும் போது சிரிக்கவும் பின்னர் நினைக்துப் பார்த்து அசைபோடும் போது அழவும் வைக்க வேண்டும் என்பார் சாப்ளின். சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையினரின் யூத ஒழிப்பு குறித்து எண்ணற்ற திரைப்படங்கள் வந்திருக்கும் போதிலும் அவற்றின் பொதுவான அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நகைச்சுவையின் வாயிலாக ஒரு மாபெரும் துன்பத்தை பதிவு செய்வதில் தனித்துவமான படைப்பாகிறது. “Life is Beautiful“ 
  
இத்தாலியில் ஒரு நகரத்தில் புத்தகக் கடை வத்திருக்கும் சாமானிய யூத இத்தாலியன் குய்டோ. அவன் தோரா எனும் பெண் மீது காதல் கொண்டு மணக்கிறான். அவர்களின் அன்பின் சாட்சியாய் அவர்களுக்கு பிறக்கும் மகன் ஜோஸ்வாவின் பிறந்தநாள் அன்று னிகழ்ந்து கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போர் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. குடும்பம் நாஜிக்களால் சிறைபிடிக்கப் பட்டு அவர்கள் சித்ரவதை கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். 

ஆண்களோடு இருக்கும் தன் மகனுக்கு சூழலின் கடுமையும் உண்மையின் கொடூரமும் தெரியாதவாறு ஒரு தந்திரம் செய்கிறான் குய்டோ. தனது அபாரமான கற்பனைத் திறனால் அங்கே நடப்பது எல்லாம் ஒரு பெரிய விளையாட்டு எனவும் அதில் வெல்பவருக்கு ஒரு ராணுவ டாங்க் பரிசாக வழங்கப்படும் என்றும் ஜோஸ்வாவை நம்பவைக்கிறான். இறுதிக் காட்சி மகனது பார்வையில் பெரிய நகைச்சுவையாகவும் பார்வையாளர்களுக்கோ உள்ளம் கிழிக்கும் துயராகவும் ஒரு சேர இருக்கும் அத்தருணத்தை கடப்பது அவ்வளவு எளிதல்ல.

இயக்குனர் ராபர்டோ பெனிக்னி அப்படத்தின் நாயகனாகவும் மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

Movie : Life is Beautiful (1997)
Language : Italian
Director : Roberto Benigni

சினிமா எனும் ரசவாதம் -Cinema Paradiso

Thursday, January 16, 2014


திரையரங்குகளில் சினிமா பார்ப்பது ஒரு சமூக நிகழ்வு. எல்லா மனிதர்களையும் அவர்தம் பேதங்களை மறந்து, இருளில் ஒளிரும் திரையின் முன்னே சில மணி நேரங்கள் இருக்கச் செய்வது சினிமா நிகழ்த்தும் மாயம். நமது பால்யத்தின் நினைவறைகளில் நிச்சயம் நமக்கு பிரியமான ஒரு திரையரங்கைக் குறித்த அனுபவம் ஒளிந்திருக்கும்.

இளமையில் ஒரு இத்தாலிய கிராமத்தில், ஒரு சிறுவனுக்கு அவ்வூரின் திரையரங்கில் ஆப்பரேட்டராக பணியாற்றும் Alfredo நண்பராகிறார். திரைப்படங்கள் அவர்களது நட்பினை இறுகக் கட்டுகிறது. கைகூடாத காதலோடு பதின்வயதில், அவரது சொற்படி அவன் தன் ஊரை விட்டு ரோம் நகருக்குச் செல்கிறான். முப்பது வருடங்கள் கழித்து வாழ்வின் பகடை அவனை ஒரு திரைப்பட இயக்குனராக்கியிருக்கிறது, ஆல்பெரேதோவின் மரண செய்தி அவனை மீண்டும் அவனை சொந்த ஊருக்கு வரவழைக்கிறது. மரண செய்தியை சொன்ன அவனது தோழி அவர் யாரென வினவ அவனது மனம் பின்னோக்கி ஞாபக நதியில் நீந்தத் துவங்கிகிறது. 

அதன் வழியே நட்பும் காதலும், இழப்பும் வலியும் நம் கண் முன்னே விரிகிறது. ஆல்பரேதோவிற்கு பிறகு பராமரிக்க ஆளின்றி அத்திரையரங்கம் இடிக்கப்படுகிறது. திரை அரங்கங்களுக்கும் ஒரு சினிமா ரசிகனுக்கும் உள்ள ஆத்மார்த்தமான காதல் தளும்பும் பிணைப்பை சொன்ன ஆகச் சிறந்த படம் நான் பார்த்த வரையில் இதுதான். உங்களுக்கு சினிமாவின் மீது காதலிருப்பின் இது உங்கள் மனதை விட்டு அகலாது, என்றும்.

Movie : Cinema Paradiso (1988)
Language : Italian
Director : Giuseppe Tornatore

வாழ்வெனும் வரம் - It's a Wonderful Life










ஒருவரது வாழ்க்கையில் ஆகச் சிறந்த வரம் அவருக்கு வாய்த்த வாழ்க்கை தான். உலகெங்கும் வாழ்க்கையை கொண்டாடும் திரைப்படங்களில் தனி இடத்தைப் பெற்ற திரைப்படம் “ It's a Wonderful Life". மனிதர்கள் பெரும்பாலும் தங்களை சாதாரணமானவர்களாகவும் தங்களால் செய்யப்பட்டவை ஒன்றுமே முக்கியத்துவம் இல்லாதது எனும் பாவனையில் தங்கள் வாழ்க்கையே வெறுமையாய் உணருகின்றனர். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் சாதரணமாக செய்யும் பல செயல்கள் எப்படி சகமனிதரின் வாழ்வின் திருப்புமுனைகளாய் அமையும் என்பதே இப்படத்தின் திரைக்கதையின் அடிநாதம். வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக பார்க்கும் விதத்தில் வாழ்வு குறித்த நம் புரிதலை மாற்றும் இப்படம். பிற்காலங்களில் ஹிட்சாக்கின் ஆஸ்தான நாயகனான James Stewart தன் இயல்பான நடிப்பால் இப்படைப்பிற்கு உயிரூட்டியிருப்பார். படத்தின் வசனங்கள் மிகப் பிரபலமான மேற்கோள்களாக இன்றளவும் உள்ளன.

Movie : It's a Wonderful Life (1946)
Language : English
Director : Frank Capra