என் பார்வையில் திரை விமர்சன வடிவம்

Saturday, July 13, 2013









என் பார்வையில் திரை விமர்சன வடிவம்

நாள்தோறும் நமக்கு வாசிக்கக் கிடைக்கும் இணையப் படைப்புகளில் எப்பொதும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரு விடயம் திரைப்பட விமர்சனங்கள். விமர்சனங்கள் என எழுதப்படும் பல பிரதிகள் திரைப்படத்தின் கதையை வார்த்தையால் மறுபிரதியெடுக்கும் வேலையையே செய்கின்றன. படைப்பைக் குறித்த ஆழமான பார்வை அவற்றில் இருப்பது மிக அரிதான ஒன்று. 

இதற்கு ஒரு காரணம் வாசக மனநிலையாகக் கூட இருக்கலாம். நம்மில் பெரும்பாலனோர் வெளியான புதிய திரைப்பமொன்றை குறித்த பிரதிகளையே வாசிக்க முற்படுகிறோம். அதன் முழு நோக்கமும் கதையைத் தெரிந்து கொண்டு, அப்படைப்பை பார்க்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் பொருட்டே வாசிக்கப் படுகிறது. அதனால் ஒரு வேளை எழுதுபவரும் அந்தத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்ற விதத்தில் தனது பிரதியை படைக்கிறார்.

என் வாசிப்பில் பல சிறந்த படைப்புகளை கருத்தூன்றி அலசி, எழுதப்பட்ட அற்புதமான விமர்சனங்களையும் திரைப்பட அறிமுகக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவ்வலைப் பக்கங்களை மிகக் குறைந்த வாசகரே வாசிக்கின்றனர். மசாலா கலந்து எழுதப்படும் சனரஞ்சக எழுத்துக்களே அதிகம் விரும்பப்படுகின்றன.   

பொதுவாக நான் வாசித்த வரையிலும் குறும்பட மற்றும் சினிமா
விமர்சனங்களுக்கு என்று ஒரு விமர்சன வடிவம் உள்ளதை உணர்கிறேன். அவைகள் முறையே

01.   குறும்பட/திரைப்படத்தின் கதையை விவரித்தல்; அதன் வழியாக
வாசகர்களுக்கு அப்படைப்பை பார்த்ததை ஒத்த ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தல்.

02. அக்கதை ஒரு காட்சி ஊடகத்தின் வழியே சொல்லப்பட்டுள்ளதால் அதன் காட்சி வடிவமைப்பு, பிண்ணனி இசையின் பங்கு, காமிரா கோணங்கள், கதாப்பாத்திர உருவாக்கம் மற்றும் அதன் வழியாக இயக்குனரின் கதையாடல் என்பன போன்ற விடயங்களை விவரித்தல்.

03. பொதுப்பார்வையில் கடந்து போக வாய்ப்பிருக்கக்கூடிய காட்சிகளின்
நுண்மைகளை வாசகருக்கு எடுத்துக்காட்டி அதன் வழியே திரைப்படங்கள்
பார்ப்பது குறித்தான சில புரிதலகளை உருவாக்கல்.

04. கதையோட்டத்தில் இடபெற்றிருக்கும் கருத்தியலை தர்க்க ரீதியாகவோ,
தத்துவ ரீதியிலோ, அழகியல் பார்வை வழியோ, குறிப்பிட்ட- படைப்பை பொறுத்த வரையில் பொருந்தி வரக்கூடிய-  இன்னம் ஏனைய வழிகளிலோ அப்படைப்பின் வழி இயக்குனர் இந்த சமூகத்தோடு நிகழ்த்தும் உரையாடலை எடுத்துக் காட்டி அப்படைப்பை முறையாக நோக்கமானது வாசிக்கும் வாசகர்களை கண்டடைவதற்கான சாத்தியங்களை உருவாக்குதல்.

05. அந்த படைப்பு குறித்த ஏனைய தகவல்கள், பின்புலங்கள், இயக்குனர்
குறித்த குறிப்புகள், அவரது பிற படைப்பை குறித்த தகவல்கள் என்பன போன்ற கட்டுரையின் மையமாக எடுத்துக் கொள்ளப்பட்ட படைப்பின் இதர தகவல்களை தருதல்

06. இவைகளின் வழியே ஒரு கலைப் படைப்பை அதன் சகல பரிமாணங்களுடன் (இயன்ற அளவிற்கு) புரிந்து கொண்டு அதன் முழுமையான அனுபவத்தை வாசகர் பெற்று கொள்ள வகை செய்தல்.



2 comments:

Prem S said...

நீங்கள் சொல்வது உண்மை தான்

வருணன் said...

நன்றி நண்பா.

Post a Comment