மொழியைத் துறந்த கவிதை

Saturday, May 4, 2013



அன்பெனும் வார்த்தையைக் கேட்டதும் தோன்றுகின்ற மன பிம்பத்தில் நிறைந்திருப்பது பெரும்பாலும் தாய் தான். ஏனோ தந்தையின் ஆளுமை எப்பொதும் கண்டிப்பு மிக்கதாகவே கட்டமைக்கப் படுகின்றது. இருப்பினும் தந்தைகளிடத்திலும் மிகுதியாயிருக்கும் அன்பு கலை இலக்கிய பரப்பில்
ஏறக்குறைய சொல்ல மறந்த கதையாகவே இருக்கிறது தாயின் அன்புக்கு தரப்பட்டுள்ள கவனத்தோடு ஒப்பிடும் போது.

சினிமா கலையில் குறும்படங்கள் தனி ரகம். சொல்லும் கதையின் முழு தாக்கத்தையும் குறுகிய நேரத்தில் சில காட்சிகளிலேயே பார்வையாளனுக்கு கடத்திட வேண்டிய அவசியத்தை உள்ளடக்கிய சவால் அது. ஒரு தந்தைக்கும்  மகளுக்குமான அன்புறவை எட்டரை நிமிட கால இடைவெளியில், அதுவும் மொழிகளற்று, சொல்லியிருக்கும் ஆச்சரியம் டச்சு குறும்படம் தந்தையும் மகளும்” (Father and Daughter, 2000). மிஷெல் டுடாக் (Michael Dudok de Wit) எழுதி இயக்கிய இக்குறும்படம் 2000 ஆண்டிற்கான சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றது.







இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அனுமேஷன் துறை அசுர வளர்ச்சி காணத் துவக்கிய காலகட்டத்தில் (Toy Story திரைப்படத்திற்குப் பிறகு பல தொழில்நுட்ப சாத்தியங்கள் உருவாகியிருந்தது) அன்றைய முறைமைகளை முற்றாக  புறக்கணித்துவிட்டு டுடாக் கோட்டோவியப் பாணியில் தனது படத்தை உருவாக்கியிருந்தார். ஆம். இயக்கத்தோடு கூடவே மொத்த அனிமேஷனையும் அதன் பிண்ணனியையும் அர்ஜான் வில்ஷுட்டுடன் (Arjan Wilschut) இணைந்து அவரே  உயிரூட்டியிருந்தார். வண்ணக் கலவைகள் பெரும்பான்மையாய் பழுப்பும் பழுப்பு சார்ந்த நிறங்களிலேயே திரையை தீட்டியிருந்தன.




கிளாரினெட் இசையோடு துவங்கிறது படம். வசனமே இல்லது வெறும் இசையே கதையின் நுண்மையான உணர்வுகளைச் சொல்லும் ஊடகமாகிறது. ஒரு தந்தையும் மகளும் தத்தமது மிதிவண்டிகளில் நெதர்லந்தின் இயற்கை ஆசீர்வத்திருக்கும் வீதி வழி வருகின்ற துவக்கக் காட்சி. செல்லும் வழியில் ஒரு சாலையோரம் வரிசையில் நிற்கும் ஒரு மரத்தடியில் மிதிவண்டிகளை இளைப்பாற விட்டு எதிரேயிருக்கும் நீர்பரப்பை நோக்கிச் செல்கிறார். அங்கு ஒரு படகு அவருக்காய் தயார்
நிலையில். தன் அன்பை கன்னங்களில் முத்தங்களாய் பதியனிட்ட மகளை விடுத்து அதில் புறப்படுகிறார். படகில் ஏறும் முன் கண நேரத் தடுமாற்றம். பிரிந்து போக வேண்டிய நிர்பந்தத்திற்கும் தனது இருப்பை வேண்டும் மகளின்  யாசிப்பிற்கும் இடையேயான உணர்ச்சிப் போராட்டம். மனதின் இந்த ஊசலாட்டத்தின் உந்துதலால் திரும்பி ஓடி வந்து தன் உயிரைத் வாரியணைத்துக் கொள்கிறார். தேவைகள் நிர்பந்திக்கும் புறப்பாடு தவிர்க்கவியலாதது. புறப்படுகிறார் சிறுமியை கரைதனில் விடுத்து.









தந்தையோடு வந்தவள் தனியாய் திரும்புகிறாள். தகப்பனின் இருப்பையும் அவரது அணைப்பையும் எதிர்நோக்கும் அவளது பால்யம் அவளை நாள்தோறும் அதே இடத்திற்கே வருவிக்கிறது. தந்தையை காணும் ஆவல் தேக்கி அன்றாடம் அவ்விடம் வருவது அவளுக்கு வாடிக்கையாகிறது. கிளாரினெடின் மௌனத்தை பியானோவின் இசை நிரப்புகிறது. ஒரு கட்டத்தில் அவளது குணாதிசியமாய் மாறுகிறது அந்த தேடல். பருவம் மாறுகிறது. கிளைகளில் தங்கா இலைகள் உதிர்கின்றன. காற்றும்
வெயிலும் மழையும் பனியுமாய் காலம் உடை மாற்றி விடுகிறது நிலத்திற்கு. எந்த மாற்றமும் சிறுமியின் தகப்பனை எதிர்பார்க்கும் அந்த காத்திருப்பை ஒன்றும் செய்ய முடியவில்லை. விடிந்தால் ஆதவன் எழுவது போல ஆகிறது அவளுடைய வருகையும். தூரத்தைப் புசிக்கும் சக்கரத்தின் சுழற்சியாய் அவளது வயதை உண்கிறது காலம். சிறுமி யுவதியாகிறாள். கால ஓட்டமோ பதின்மத்தில் வாயிலில் தோழிகளின் உடனிருப்போ அவளுடைய தந்தையைக் கோருமந்த ஆழ்மன கேவலை எந்த விதத்திலும் மாற்றயிருக்கவில்லை.

தனக்காக ஒருவன் வந்த பிறகும் மனம் தந்தையில்லாத மனதின் வெறுமையை மறக்க மறுக்கிறது. இருள் போர்த்தி நிலம் உறங்கும் இரவுகளில் கூட விழித்தே இருக்கிறது அவளது தேடல். நாட்களின் நகர்வில் அவளுக்கும் குடும்பமும் குழந்தைகளும் என்றாகிறது. தமது தந்தையோடு அதே நீர் நிலையில் தனது மழலைகள் விளையாடி மகிழும் போது இவள் மட்டும் தொடுவானில் நிலைத்த கண்களோடு கரையினிலே நிற்கிறாள்.

ஒரு இலையுதிர்ந்த மரமொன்று காலச் சக்கரத்தின் சுழற்சியில் கரைந்த இவளது இளமையின் குறியீடாகிறது. உடலிற்கு மட்டுமே வயது கூடி இன்னும் பால்யத்தைக் கூட கடக்கா நினைவுகளோடு, இன்னமும் வருகை தொடர்கிறது. கிழப்பருவமெய்தி மூதாட்டியாய் அவள் வழக்கமான இடத்தில் மிதிவண்டியை நிறுத்துகிறாள். நிற்க மறுக்குமதனை நிறுத்தும் அவளது எத்தணிப்புகள் பொய்க்க அதனை அப்படியே விடுத்து நீர் பரப்பின் அருகிலே வருகிறாள். காலன் குடித்த நீர்பரப்பில் புற்கள் மட்டுமே மண்டிக் கிடக்கின்றன. புற்களை விலக்கி மெல்ல அதனூடாய்  நடக்கத் துவங்குகிறாள். வழியில் ஒரு சமப்பரப்பில் தன் தந்தையை சுமந்து சென்ற படகினை மட்டும் காண்கிறாள். அதனை மெல்ல ஸ்பரிசித்து கால்களைக் குறுக்கிப் படுத்துக் கொள்கிறாள். பார்க்கும் நமக்கோ அது அவளது தந்தையின்  மடி போலவும் அவள் அதில் தலை வைத்து தான் சுகித்துணரா தன் தந்தையின் அருகாமையை, இருப்பை உணர முற்படுவதாகவுமே தோன்றுகிறது.




 நேரம் கடப்பதை தவழும் முகில்களின் நகர்வில் அறிகிறோம். திடீரென மூதாட்டி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறாள் எதை நோக்கியோ. எட்டு வைத்து நகர நகர அவள் வயது குறைந்து குறைந்து சிறுமியாகிறாள். நடை நிற்கிறது எட்டும் தூரத்தில்  தந்தையைக் கண்டவுடன். கண நேர உறைதலுக்குப் பின் இருவரும் ஒரு அடி முன்னேறி நெருங்க ஒரு யுகத்தின் ஏக்கம் முடிந்தவளாய் தேடியதைக் கண்டுகொண்ட பேரானந்தத்தில் ஆரத்தழுவிக் கொள்கிறாள் தந்தையை. திரையில் இருள் பரவ முடிகிறது படம். நம் மனதில் அதீத அன்பும் வாஞ்சையும் உடையவராய் நமது தந்தையின் முகம் மின்னலாய் வந்து போகிறது.

மொழியை முற்றிலுமாய் தவிர்த்து இசை மற்றும் குறியீடுகளின் வழியாகவே கதை சொல்லும் முறைமையை மிக நேர்த்தியாய் கையாண்டிருக்கிறார் இயக்குனர். காட்சிகள் வழியே நம்மை வழிநடத்தி தனிமனித அனுபவ சரடுகளின் வாயிலாக பார்வையாளர்களே கதையினைப் புரிந்து கொள்ளும் ஒரு திரை அனுபவத்தை படைப்பு தருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் விரவிக் கிடக்கும் குறியீடுகள் ஒரு விழிப்பான பார்வையாளனின் கவனத்தை வேண்டி நிற்கும் அதே வேளையில், உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்படும் ஒரு சாமானிய பார்வையாளனுக்கும்  இடமளிக்கும் பாணியில் அமைந்திருக்கிறது கதையாடல்.

மையப் பாத்திரமான சிறுமியின் வயதை பிரதிபலிக்கும் வண்ணமாய், அவளது பால்ய காலத்திற்காண பிண்ணனி இசை துள்ளலாகவும் வேகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் அவளது வயது முதிர முதிர இசையின் துள்ளலும்  குறைவதாக கோர்க்கப்பட்டுள்ளது. இந்த கோணத்தில் பார்க்கையில் இசையும் ஒரு குறியீடாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைபாளர்கள் நார்மண்ட் ரோஜர்
(Normand Roger) மற்றும் டெனிஸ் சார்ட்ரண்ட் (Denis Chartrand) தங்களின் இசையால் ஒரு தனித்துவமான பரிமாணத்தை நிச்சயம் திரைக்கதையோட்டத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

வசனங்களற்று இசையை மட்டுமே துணையாய் கொண்ட மௌனப்படங்கள் கதை சொல்லலுக்கு பெரிதும் நம்பியிருக்க வேண்டியது முக பாவங்களையே. அது சாதாரண படமோ  அனிமேஷன் படமோ, இரண்டிற்கும் இது பொதுவானதே. ஆனால் தனது அனிமேஷனை வெறும் கோட்டோவியச் சாயலில் உருவாக்கிய இயக்குனர் டுடாக் பாரம்பரியமான மௌனப்  படங்களின் கதை சொல்லும் முறைமைகளைப் புறக்கணித்து முற்றாக ஒரு புதிய கதை சொல்லும் யுக்தியை கையாண்டுள்ளார். படத்தில் ஒரு க்ளோசப் ஷாட் கூட இல்லை.  பெரும்பாலான ஷாட்கள் நிலையாக இருக்கும் காமிராவின்  சட்டத்துக்குள் (Frame) கதாபாத்திரங்கள் வரும் டெயில் அவே ஷாட்கள் (Tail away Shot) தான்.

எந்த ஒரு படைப்பாயினும், அது இலக்கியப் படைப்போ அல்லது கலைப் படைப்போ எதுவாயினும், படைப்பாளியை மீறி எதையோ சொல்ல தொடர்ந்து எத்தணிக்கின்றன. தன் குடும்பம் தழைக்க, அவர்களது நல்வாழ்விற்காகவும் மகிழ்ச்சிக்காகவும், எத்தனையோ பேர் திரைகடல் ஓடி திரவியம் தேடுகிறார்கள். கூடியிருந்து  சுகித்திருக்கக் கூடிய இளமை அனைத்தையும் அயல் நாடுகளில் பொருள் தேடும் பொருட்டு இழக்கின்றனர். அப்படி பணி நிமித்தமாய் தன் புதல்வியைப் பிரிந்து செல்லும் ஒரு தந்தையின் வரவை எதிர்நோக்கும் ஒரு மகளின் ஏக்கத்தால் எழுதப்பட்ட கதை இதுவென்றும் பொருள் கொள்ள முடியும்.


இயக்குனர் Michael Dudok de Wit
இயக்குனர் டுடாக் (1953- ) இது வரையில் மொத்தமே நான்கு குறும்படங்களே எடுத்துள்ளார். Tom Sweep (1992), The Monk and the Fish (1994), Father and Daughter (2000), The Aroma of Tea (2006) ஆகியன இவரது படைப்புகள். நெதர்லாந்தில் பிறந்து தற்போது லண்டன் நகரத்தில் வசிக்கும் இவர் பிற திரைப்படங்களில் அனிமேஷன் கலைஞராவும், விளம்பரப் படங்களை இயக்கியும்  அவற்றுக்கு அனிமேஷன் செய்தும் வருகிறார். இவர் இயக்கிய குறும்படங்களின் அனுமேஷன்களில் ஒரு பொதுமைத் தன்மையை பார்க்கலாம். அது சீன மற்றும் சப்பானிய ஓவிய பாணியின் (கோட்டோவியம் மற்றும் நீர் வண்ணக் கலவைகளால் ஓவியம் தீட்டும் முறைமை) சாயலை அவை பெற்றிருப்பதே. இக்குறும்படத்திற்கு கூட அவர் பென்சிலாலும் மரக்கரியாலும் வரையப்பட்ட கோட்டோவியங்களில் டிஜிட்டல் முறையில் வண்ணங்களைச் சேர்த்திருந்தார். உருவான விதத்தை  கீழ்காணும் சுட்டியை சொடுக்கிக் காணலாம்.

https://www.youtube.com/watch?v=GjwDoN3E1fA


இப்படத்தை பார்த்தவுடன் பார்வையாளர்கள் தத்தமது தந்தையரை குறித்த மன பிம்பங்களை மீள் உருவாக்கம் செய்வது அனிச்சையானதே.

குறிப்பு : இக்கட்டுரையை வெளியிட்ட மலைகள் (17-04-13)
இணைய இதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment