இந்த அனுபவம் உங்களுடையதாகவும் இருக்கலாம்!

Tuesday, April 2, 2013









புத்தககடையில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்கிறேன். கழிந்த திசம்பர் மாதம் மதுரையில் ஒரு புத்தகக் கடையில்காலச் சுவடு பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும்எனும் வாசகத்தால் ஈர்க்கப் பட்டு உள்ளே ஆவலாய் சென்றேன். விளம்பரம் முற்றிலும் பொய்யில்லை. ஓரளவிற்கு வைத்திருந்தார்கள். இணையத்திலும் ஏனைய புத்தகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் வழியே நான் அறிய வந்த படைப்புகளை ஆர்வமுடன் தேடினேன். சில கிடைத்தன. அவை காலச்சுவடு கிளாஸிக் வரிசையில் வெளியான நூல்கள்.

பிரதிகள் ஒன்றிரண்டே இருந்தன. சில படைப்புகள் ஒரே ஒரு பிரதி மட்டும் இருந்தன, அதுவும் பிரிக்க முடியாதபடி சீல் செய்யப்பட்ட கண்ணாடி அட்டைகளுக்குள். என் கரங்களில் கரிச்சான் குஞ்சுவின்பசித்த மானுடம்இருந்தது. நான் அப்படைப்பை குறித்து அறிந்திருக்கிறேனே அன்றி வாசித்ததில்லை. நான் வாசிக்காமல் எந்த புத்தகத்தையும் வாங்கியது இல்லை. ஏனெனில் எவ்வளவு பெரிய படைபாளியாயினும் அவருடைய எழுத்து நடையும் எண்ண ஓட்டமும் நான் உள்ளே சென்று வரக்கூடிய வகையில் இருந்தால் மட்டுமே படைப்பை உள்வாங்கிட முடியும். இல்லையேல் வாசிப்பு அர்த்தமற்றதாகிவிடும்.  

எனவே அந்த கண்ணாடி உறையை கிழிக்க முயன்றேன். உடனே அங்கு வேலை செய்யும் ஒரு இளைஞன் வேகமாய் ஓடி வந்து, ‘சார்! கவரை ஒடைக்கக் கூடாது.  நீங்க வாங்க போறீங்கன்னா மட்டும் ஒடைங்க’, என்றார்.

எனக்கு ஒரு வகையில் அது நிர்பத்திப்பாகவே பட்டது. வேறு ஏதேனும் உறையிடாத பிரதி இருக்கிறதாவெனப் பார்த்தால் அதுவும் இல்லை. நேரே கல்லாவில் உட்கார்ந்தவரிடம் சென்று விவரம் சொன்னேன். அவர், ‘ஆமா சார்! கவர் இல்லாம இருந்தா யாரும் வாங்க மாட்டாங்க ‘, என்றார். 

நான் வாசிக்காமல் எப்படி ஒரு புத்தகத்தை வாங்குவது என கேள்வியெழுப்ப அவரோ, “ சார் வரவுங்க அப்படி சீல் இல்லாத புத்தகத்த பார்த்துட்டு அதை வேண்டாம்னு சொல்லி கவர் பண்ணியிருக்க புத்தகமாத்தான் கேக்குறாங்க. கவர் கிழிஞ்சிருந்தா வேண்டாம்னு சொல்றாங்க. அப்புறம் அந்த புத்தகத்த யாரும் வாங்க மாட்டாங்க” என்றார். சீல் உடைந்த புத்தகங்கள் அழுக்காக இருக்கிற பட்சத்தில் மட்டுமே பெரும்பான்மையோர் வாங்க பறுப்பர். விற்பனைக்கு வைத்திருக்கும் புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது விற்பனையாளரின் கடமைதானே? இதுவே ஒரு திண்பண்டக் கடையில் இப்படி ஒரு பொருள் விற்பனைக்கு இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படுமா? 

நானோ அவரிடம் ,” சார்! நான் என்ன வாழ்த்து அட்டையா வாங்கப் போறேன் வெறும் வெளி அட்டையைப் பார்த்து வாங்க? உள்ள பாத்தாத்தானே புத்தகத்தைப் பத்தி தெரியும். கவர் பண்ணாத பிரதி ஏதாவது இருந்தா குடுங்க பார்த்துட்டு பிடித்திருந்தா கண்டிப்பா நான் அதையே வாங்கிகுறேன்” , என என் தரப்பை எடுத்துச் சொன்னேன்.
அவரோ திருப்தியில்லாதவராய் ,” உங்கள மாதிரி ஒரு சிலர் தான் சார் வாங்குறாங்க. நீங்க வேணா போய் பாருங்க. எல்லா புக்கும் இப்ப இப்படி கவர் போட்டு தான் வருது ”, என ஒரு விகடன் பிரசுர புத்தகத்தை எடுத்துக் காட்டினார்.

நான் அவரிடம் பொறுமையாக விளக்கினேன். அதாவது உறையிலிட்டு நூல்கள் அனுப்பப்படுவதே  பாதுகாப்பாக வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான் (இந்த விடயத்தில் எனக்கு இன்னொமொரு ஐயம் உண்டு. அதாவது பதிப்பகத்தினர் வேண்டுமென்றே இது போல செய்கிறார்களோ? - வாசனை திரவிய குப்பிகளை  சீல் செய்து விற்பதைப் போல.) மேலும், “நீங்கள் காட்டும் விகடன் நூலகள் எல்லாம் ஏற்கனவே அப்பத்திரிக்கையில் வந்த கட்டுரைகள் போன்றவற்றின் தொகுப்பே. அதனால் அது உறையிடபட்டிருந்தாலும் பிரச்சனை இல்லை. உள்ளடக்கம் தான் எல்லோருக்கும் தெரிந்ததே”. என்றேன்.

எனது எந்த விளக்கமும் அவரை திருப்திப் படுத்தியதாக தெரியவில்லை. முடிவாக அவர் என்னிடம், “ நீங்க வேணும்னா பதிப்பகத்துக்கே போய் இது குறிச்சு  கேட்டுக்கோங்க” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
நானும் அவரிடம் அதற்கு மேல் வாதாடி பிரயோசனமில்லை என்பதை புரிந்து கொண்டு இரண்டே இரண்டு புத்தகங்களோடு வீடு திரும்பினேன். செல்லும் முன் அவரிடம், “ நல்ல எழுத்த வாசிக்கிறவுங்க குறையுறாங்க என வருத்தப்படுறீங்க. ஆனா வரும் சிலருக்கு தேர்ந்திடுக்கிறதுல இத்தனை சிக்கல் இருந்தா எப்படி?” என்று சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திருகாமல் வெளியேறினேன். ஆர்வத்தோடு எங்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மூன்று நான்கு வாடிக்கையாளர்கள் எப்பொதும் போல மௌனமாய் இருந்து விட்டனர்.

No comments:

Post a Comment