இனி எல்லாம் உண்டு

Tuesday, April 12, 2011



கடந்த 10 மாதங்களாக எனது வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பல சோடி கண்கள் வழியாக, பல இதயங்களுக்குள் குடியமர்த்த வேண்டுமென்ற ஆவல் காரணமாகவே நான் எழுத ஆரம்பித்தேன். எனது ஆசிரியப் பணியின் நிமித்தமாக, என்னால் வலையுலகினுள் அதிக நேரம் செலவிட முடிவதில்லை என்பது உண்மையே. என்னைத் தொடர்பவர்களுடைய வலைப்பூவில் அவர்களுடைய எழுத்துக்களைக் கூட- எனக்கு அதியார்வம் இருப்பினும்- என்னால் வாசித்துத் தொடர முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. ஆயினும் உங்களில் பலர் உங்கள் பணிக்கிடையேயும், வலை உலகில் அதிக நேரம் செலவிட முடிவதைக் கண்டு ஆச்சரியப் படாமல் இருக்க முடிவதில்லை.

நான் தொடராத பட்சத்திலும், எனது எழுத்துக்களை தொடர்ந்து அதனைக் குறித்த பின்னூட்டமும் இட்டு என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் முகம் தெரியாத தோழர் தோழிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த, காதல் நிறைந்த வந்தனங்கள். கழிந்த மாதங்களில் இவ்வலையுலகில் எனக்கு பிரதிபலன் எதிர்பாராத சில நட்புகள் கிடைத்தது எனது பாக்கியம். தோழி ஷம்மி, தோழன் ராஜா, எனது நண்பன் நிரூபன், தொடர்ந்து எனது எழுத்திற்கு எதிர்வினை ஆற்றிவரும் நண்பன் பாலா... இன்னும் நான் சொல்லாமல் விட்ட எண்ணற்ற சகாக்கள்...

மிக சமீபத்தில் நண்பன் நிரூபனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மிகக் குறுகிய வட்ட வாசகப் பரப்ப்பினுள்ளேயே எனது கவிதைகள் முடங்கி விடுவது குறித்து சொல்லியிருந்தேன். அவர் எனக்கு அனுப்பிய பதிலில் சொன்ன ஒரு விசயம் என்னை யோசனையில் ஆழ்த்தியது. அவர் அதில் நான் வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதுவதை குறுகிய வாசக வட்டத்திற்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டியிருந்தார். இத்தனை காலமும் எனக்கு இச்சிந்தனை எப்படி வரவில்லை என்று வியந்தேன். எனக்கு கவிதைகள் மீது அலாதி காதல். ஆனால் எல்லொருக்கும் அவ்வகையிலேயே இருந்திட வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை. இந்த எளிய யதார்த்தம் எனது நண்பன் மூலமாகவே எனக்கு உணர்த்தப்பட்டுள்ளது. நிரூபனுக்கு எனது சிறப்பு வணக்கங்கள். நன்றி நண்பா!

எனக்கு சகலத்திலும் நாட்டமுண்டு. எல்லையற்ற கற்றலே நான் கற்க விரும்புவது. அதுவே எனது குழந்தைகளுக்கு நான் போதிக்க விரும்புவதும் கூட. என்னிடமுள்ள ஒரு குறை, காகிதத்தில் எவ்வளவு எழுதச் சொன்னாலும் எழுதிவிடுகின்ற என்னால், தட்டச்சு செய்து அதனை மென்பிரதியாக(Soft Copy) மாற்று வேண்டுமென்றால், இன்று வரை வேப்பங்காய் தான். எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாமை ஒரு புறம் இருப்பினும் எனது சோம்பலும் இதில் சம பங்காற்றத் தவறுவதில்லை.

ஆனால் வரும் மாதம் விடுமுறை காலமாதலால் சோம்பல் துடைத்து தங்களோடு கதைக்க வருகிறான் வருணன்.

வருணன் கவிதைகளாக இருந்த எனது வலைப்பூ இனி

"என் வார்த்தை.. என் குரல்.. என் முகம்.."

என மாற்றம் பெறுகிறது. ஆனாலும் கவிதைகளும் அவ்வப்போது உண்டு. அது எனது பானமாதலால்...

குறிப்பு: எனது பணி இயற்பியல் போதிப்பது என்ற போதும் அதேயளவு- சொல்லப் போனால் அதை விட- ஆர்வம் இலக்கியத்திலும் உலக சினிமாவிலும் உண்டு... ஆதலால் பெரும்பாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றின் வழியாக நமது சமூகம், வாழ்வியல், உளவியல் என்ற வகைமைகளுக்குள் செல்லலாம் என கருதுகிறேன்...

என்றென்றும் அன்புடன்,
வருணன்.

14 comments:

Yaathoramani.blogspot.com said...

இனி எல்லாம் உண்டு
தலைப்பே நிறைய எதிர்பார்ப்பை
விதைத்துப்போகிறது
மாற்றத்துடன் கூடிய
பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
(நானும் மதுரை என்பதாலோ
நானும் கவிதைகள் மட்டும்
எழுதிக்கொண்டிருப்பவன் என்பதாலோ
கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு)

Anonymous said...

//அதை விட- ஆர்வம் இலக்கியத்திலும் உலக சினிமாவிலும் உண்டு.//
வாங்க வருணன். நான் உங்களைப் பற்றி கணித்திருந்தது மிகச் சரியென உங்கள் வார்த்தைகளின் வழி உறுதி செய்து கொண்டேன்.
வழக்கம் போல் சிறப்பான ஆக்கங்கள் எதிர்பார்த்திருக்கிறேன். பணிச்சுமை மற்றும் தேர்வுகளால் கொஞ்சம் நாள் என் வருகை இருக்காது நண்பா.
முடிந்த மட்டும் கண்டிப்பாய் உங்களை தொடர்ந்திருப்பேன். வாழ்த்துக்கள்! :)

வருணன் said...

நன்றி ரமணி.எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயன்ற அளவு முயல்கிறேன்.

வருணன் said...

தொடர் ஊக்கத்துக்கு நன்றி பாலா. தேர்வுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... :)

நிரூபன் said...

நல்ல முயற்சி சகோ.. சிறகு இப்போது தான் முளைத்திருக்கிறது என நினைக்கிறேன். அழகாகப் பறக்க என் வாழ்த்துக்களை இந்த நன் நாளில் தெரிவித்துக் கொள்கிறேன் சகோ.

நிரூபன் said...

உங்களுக்கு என் உளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

ஆனந்தி.. said...

Best wishes varunan..

இராஜராஜேஸ்வரி said...

ஆர்வம் இலக்கியத்திலும் உலக சினிமாவிலும் உண்டு... //
மனம் நிறைந்த இனிய வரவேற்பும் வாழ்த்துக்களும்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Best wishes to uuu

மனம் திறந்து... (மதி) said...

எதை எழுதினால் நிறையப் பேர் படிப்பார்கள் என்ற திசையில் செல்வது அவ்வளவு உகந்தது அல்ல!

நான் எதைச் சொல்ல விரும்புகிறேன்? ஏன்? எதற்காக? இதை நிறையப் பேர் படிக்க வேண்டுமானால் நான் எப்படிச் சொல்ல வேண்டும்? தமிழ்மணம் தரவரிசையில் என் வலைப்பூ முதலிடம் பெற்றால் ஆகப் போவது என்ன? அப்படி இல்லாவிட்டால் நான் இழக்கப் போவது என்ன? அப்படி முன் வரிசையில் இருப்பவர்கள் தற்போது செய்து கொண்டிருப்பது என்ன? என்பன ஆரோக்கியமான கேள்விகள், தேடல்கள், சேர வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லும் வழித் தடங்கள்! காலா காலத்துக்கும்/ காலம் கடந்து (தான்!) உங்களை உலகம் அடையாளம் கண்டு கொள்ள உதவும் படைப்புகளை உருவாக்கும் உந்து சக்திகள்!

உள்ளிய வண்ணம் உழைக்க, உயர மனம் திறந்து வாழ்த்துகிறேன்!

வருணன் said...

தோழர் மதிக்கு,

மனம் திறந்து பாசாங்கின்றி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருப்பதை மனதார வரவேற்கிறேன். ஒரு படைப்பாளன் தனது படைப்புகளால் வாசகனை அடைகையில் மட்டுமே முழுமை அடைகிறான். அவனது தேடலை வாசகன் முன் பரப்பி கடைவிரிப்பது, அவனையும் தனது எண்ண அலைவரிசைக்கு ஒருமிக்கச் செய்து தனது கருத்தாக்கத்தை ஒட்டி அவனையும் சிந்திக்கத் தூண்டுவதற்கே அன்றி எழுத்தைப் படித்திட யாசிப்பதற்காக அல்ல.

நான் கவிதைகள் மட்டுமே எழுதி வந்தது உண்மை தான். ஆனால் தோழர் நிரூபன், உன்னால் இன்னும் அதிகம் முடிகின்ற போது நீ ஏன் வெறும் கவிதைகளோடு உனது படைப்புலகை சுருக்கிக் கொள்கிறாய் என்ற தொனியில் கூறியிருந்த கருத்தை என்னால் புறந்தள்ள இயலவில்லை. அதற்கிணங்கியே நான் சகலத்தையும் எழுதிட தீர்மானித்தேனே அன்றி, எனக்கு இந்த முதல் இட முட்டாள்தனத்தில் எள்ளளவும் பிடித்தமில்லை.

நான் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியது கூட, எனது கருத்துக்களை பகிர்வதன் வாயிலாக, உங்களை சிந்திக்க கோரி அழைப்பு விடுக்கும் நோக்கத்தில் தானே ஒழிய நீங்கள் போடும் ஓட்டிற்காக இல்லை.

எனது எழுத்திற்கு சராசரியாக 3 முதல் 7 ஓட்டுக்களே விழுந்து வருகின்றன. ஆயினும் நான் இதுவரை எனது எழுத்தின் தரத்திலோ, மொழிப் பிரயோகத்திலோ சமரசம் செய்து கொள்ளவே இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஓட்டுகள் தான் முக்கியமெனின், நான் என்றோ எனது மண்ணிற்கே உரிய நகைச்சுவை உணர்வோடு, நக்கல் தொனியில் எழுதி ஓட்டுக்களை வாரியிருக்க முடியும். நானிடும் பின்னூட்டங்களில் கூட அழகியல் நேர்த்தியையும், கருத்தாழமும் இருக்க வேண்டுமென ஆசை கொள்ளும் எனக்கு அப்படி செய்வதில் நாட்டமில்லை.

தங்களது வருகைக்கு நன்றி நண்பா.

வருணன் said...

நண்பா நிரூபன்,
தோழிகள் ஆனந்தி,
இராஜெஸ்வரி,
பிரஷா
தங்கள் அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் உளம் கனிந்த நன்றிகள்...

மனம் திறந்து... (மதி) said...

நன்றி ! மகிழ்ச்சி ! :)))

வருணன் said...

மறு வருகைக்கு நன்றி மதி.

Post a Comment