விதிவிலக்கு

Wednesday, September 29, 2010



காலனுடைய
வாழ்வியல்
அன்றாடங்களினின்று
விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகவே
தோன்றுகிறது.

மகிழ்ந்திருக்கையில்
அன்னையின் அரவணைப்பில்
காதலியின் கதகதப்பில்
அடுத்தவரிடம் அன்பாய் குலாவையில்
காலன் இளமையுடன்

நோயில் ஓய்ந்திருக்கையில்
கவலை கொள்கையில்
எதற்காவது காத்திருக்கையில்
போர்த் தருணங்களில்
காலன் திடீரென
வயோதிகனாய்.

புறப்பாடு

Thursday, September 23, 2010



நெடுங்காலம் ஆகிவிட்டது
நானுறங்கி
உறங்கவே இல்லையென
பொருள் கொள்ள வேண்டாம்
உறக்கத்தினின்று
எழவே இல்லையென
பொருள் கொள்க.

திடீரென ஒரு நாள்
விழிக்கதவு திறந்தது
இல்லை... இல்லை...
உடலெங்கும் விழிகள்
இருக்குமா என்ன?

தேகத்துள் எனக்கே தெரியாது
ஒளிந்து கிடந்த
ஒரு கோடி தாள்கள்
ஒரு சேர திறந்தது போல்...

மறைந்து கிடந்த ஆன்மப் பறவை
மாபெரும் சிறகுகளை
தன் உடல் சிலிர்த்து விரித்து
எதை நோக்கியோ
எங்கோ பறக்கவாரம்பித்தது.

வானுயர்ந்த தருணத்திலே
ஏதேட்சையாய் கீழ்நோக்கினால்
எனைச் சுற்றியமர்ந்து
கண்ணீர் உகுக்கின்றார் சிலர்..!

இதுவரையில் இருந்தது
உறக்கத்திலா? மயக்கத்தில்லா?
யாமறியேன்.

நான் யார்?

Tuesday, September 21, 2010



எல்லையற்ற கருணை கமழும்
அகத்தே ஒரு பொழுதில்
வெறிகொண்டு தசை திண்ணத்
துடிக்கும் ஆறாத வேட்கையொன்று
பிறிதொரு பொழுதில்
எங்கோ நிகழும் ஏதோ ஒரு
கொடுமைக்காய் கசிந்துருகும்
மலர் மனது
இரவின் வெம்மையில் தகிக்கும்
தனிமை புணர்ந்தடங்கும்
வேட்கைகள் வளர்த்தெடுத்த
அரூபமான பெண்மையொன்றை
மிருகம் தணிந்து மனிதம் என்னுள்
மீண்டும் மலருமந்த தருணத்தில்
மடிந்து உயிர்ப்பேன் இன்னொரு முறை
அடங்கும் வரை அசரீரியாய்
உள்ளிருந்து ஒலிக்குமந்த ஒற்றை
கேள்வி எல்லா தருணங்களிலும்.