யாருமற்ற ஒரு தனியிரவு
Posted by வருணன் at 6:55 PMதுணையில்லா கணங்களின்
வர்ணங்களை வரிந்து கொண்டு
மெல்லப் பரவத் துவங்குகிறது இரவு
அறை முழுமையும்
உறைந்த வெம்மையாய்
வெளியில் சிலுசிலுக்கும் குளிர்
யன்னலிடம் மன்றாடுகிறது
உள்ளே வர அனுமதி வேண்டி
மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
ஓசைப் பூக்களை உதிர்த்திட
பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
உமிழ்ந்திடும் குறுந்தகடு
தளர்ந்த உடல் நாற்காலியில் நிறைந்திட
தளராத பார்வையோ படர்கின்றது
அறை முழுவதும்
ஏழெழுபது முறையாக
படர்ந்த பார்வை படிகின்றது
ஓசையாய்ப் போன
கணப்பு அடுப்பில் கிளர்ந்து நெளியும்
தீயின் நிழலில்.
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (23-11-12)
இணைய இதழுக்கு நன்றி.
Subscribe to:
Posts (Atom)