முத்தத் தத்துவம்

Wednesday, October 12, 2011




உனதிருப்பையும் எனதிருப்பையும்
துறந்து வேரற்று அந்தரத்தில்
உதடுகள் மட்டும் அருகருகே
அவைகளுக்கிடையில் ஒடுங்கும் உலகனைத்தும்
அவைகளே ஓர் உலகமாயும்...
காமத்தின் வாசமறியும் கணங்களில்
மனம் பிளந்து எழுகின்றது
விலங்கறுத்த விலங்கு ஒன்று
உதடுகளில் முளைத்த கண்களனைத்திற்கும்
இணையைத் தவிர வேறேதும் தெரியவில்லை.
இடையிடையே அரவமாய் நாவுகள் அவ்வப்போது
நிலத்தினை நனைத்திட...
நிசி அகவும் பொழுதில்
தூரமிழக்கும் இரு உலகங்களிடையே
காத்திருக்கிறது ஒரு பிரளயம்.
சிற்றின்பத்தில் மதி தொலைக்காதே
மானிடப் பதரே...
கதறும் போதகனின் குரல் கடக்கிறது
செவிகளற்ற உலகத்தினை.
தன்னைத் தொலைக்க கற்றுத் தருகிறது தியானம்
எது செய்கிறாயோ
அதுவாய் இருவென்கிறது சென்.
கவலை கொள்ளாய் இணையே
நாம் தவணை முறையில்
ஞானிகளாகிக் கொண்டிருக்கிறோம்.

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

மதுரை சரவணன் said...

//சிற்றின்பத்தில் மதி தொலைக்காதே
மானிடப் பதரே...
கதறும் போதகனின் குரல் கடக்கிறது
செவிகளற்ற உலகத்தினை.//

super...vaalththukkal

வருணன் said...

தோழர்கள் சௌந்தர், சரவணன் இருவருக்கும் எனது நன்றிகள்.

Post a Comment