ஏதாவது சொல்

Wednesday, July 13, 2011
அடுத்தது...
ஏதாவது சொல்...
என்றழகாய் உதிர்ப்பாய்
மூன்றே வார்த்தைகளை

அவைகளோ தம் கைகோர்த்து
உலையில் விழுந்துருகி சாவிகளாகி
இதயப் பூட்டினைத் திறந்திடும்.

நீயுதிர்க்கும் இவ்வார்த்தைகளென்ன
என் மன அணையின் மதகுகளை
உயர்த்தும் தாழ்களோ?

உனக்காகவே பிறவியெடுத்தது போல்
வழியும் வார்த்தைகள்
உன்னில் முக்தியடையாது
எங்கே செல்லும்?!

விழிகள் வழியாய்
கைபேசியினின்று வந்த வார்த்தைகள்
தடம் மாறி தற்போது செவி வழி
நம் சுயம் சேர்கின்றன.

முன்னிரவில் நம்மிடையே
பறக்கத் துவங்கிய வார்த்தைப் பறவைகள்
மூன்றாம் சாமத்திலும் பயணத்தை
முடிக்க மறுக்கின்றன.

பின்னிரவிலும் நட்சத்திர நண்பர்களோடு
விழித்தபடி நாம்
அறையின் மின்விசிறிகள் நமக்கு
தோழர் தோழியராய்

அருகிலில்லாத போதே தெரிகிறது
நமது வாழ்வில் ஒருவர் மற்றவரது
இருப்பின் தேவை.

எங்கே நானிப்போது கேட்கிறேன்...
ஏதாவது சொல்... !

No comments:

Post a Comment