இரட்டை வானவில்

Saturday, May 29, 2010



ஒவ்வொரு நாளின் இருப்பிற்கும்
இறப்பிற்கும் இடையேயான
அந்திப் பொழுதுகளில்
பூத்து நடைபயில்வாய்
கடற்கரை மணலில்

அன்றைய பொழுதில்
என்னிடம் கூட சொல்லாமல்
கரை மணலில் உன் காற்தடமெழுதும்
கவிதைகளை வாசித்து வருமாறு
சிறகுகள் கட்டி வானத்தினின்று
கோடி கோடியாய் மழைத் துளிகளை
அனுப்பி வைத்தனர் தேவதைகள்
திடீரென...

தேவதை இளவரசிகளிட்ட வேலையை
செவ்வனெ செய்ய இறங்கி வந்த
சேவகர்கள் யாவரும் சாரல்களாகி- சிலர்
உன்மீது விழுந்து வழிகின்றனர்
சிறகுகள் முறிந்தும் குழைந்து சிரித்து
நனைக்கின்றனர் உன்னை முழுவதுமாய்

வேறு பலரோ உன் காற்தட கவிதைகள்
யாவற்றையும் கரைத்து தேவபாஷைகளில்
மொழிபெயர்த்து தம் எஜமானிகளுக்கு
அனுப்புகின்றனர் அவசர அவசரமாய்

நனைந்த உனக்கு
வாசித்த தேவதைகள்
வானவிற் குடையை பரிசளிக்கின்றனர்

தூரத்தில் நான் பார்த்திருக்க
இரட்டை வானவில்
விண்ணிலொன்றும்
மண்ணிலொன்றுமாய்.

வரம்

Tuesday, May 25, 2010


சரிபார்பதர்காய் கிறுக்கிய

புதிய எழுதுகோலின் கிறுக்கல்கள்

உன் கூந்தலாகியது

உன் கேசம் வருடிய என்

விரல்கள் தூரிகையாகின

வண்ணம் வாங்கிய உன்

கவிழ்ந்த பிறை நெற்றியோ

வானவில்லானது

நீ சாய்ந்து உறங்க ஆரம்பித்த

கணம் தொட்டு என் வலக்கரம்

உனக்கு தூளியானது

எனக்கோ உனதிந்த இருப்பு

வாழ்வு முழுமைக்குமான

வரமானது.


என் கனவுகளின் தேசம்

கவிதைகளின்றி அமையாதென் உலகு. கவிதைகள் நுட்பமானவை.

இதயங்களின் மொழி கவிதை. என்னை பொருத்தவரை கவிதை ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை. வாசிப்பின் போது மனதில் ஒரு சிறு மலர்ச்சியையோ அல்லது ஒரு மெல்லிய சலனத்தையோ உண்டாக்கினாலே போதுமென்பது என் கருத்து.கடவுளின் மொழி கவிதையென்பேன்.அதனை எழுதுவதும் வாசிப்பதும், இரண்டுமெ அலாதியானவை.

வாழ்வின் ஒவ்வொரு கணமும் கவித்துவமானவை.அதிலும் காதற்கணங்கள் அதிநுட்பமானவை. சூல் கொண்ட என் கவிதைகள் பிரசவிக்கும் சகலத்தையும் . சிறகுகள் முளைத்த இப்பறவை உலாவும் அங்கிங்கெனாதபடி எங்கும், பரம்பொருளை போல. கவிதைகள் என் எண்ணங்களின் விலாசம். வார்த்தைகள் அதன் முகங்கள்.வாருங்கள் உங்கள் விழிகள் செவிகளாகட்டும் . கடவுளின் மொழியில் நமது உரையாடலை துவங்கலாம்.



குறிப்பான்கள்: (LABELS)

ஸ்பரிசம் மென்மையான காதல் கவிதைகள்

சலனம் - பொதுவான பாடுபொருளை உடைய கவிதைகள்

ரணம் காதலில் சோகம்

மோக புத்ரி - மோகத்தினால் சூல் கொண்ட கவிதைகள்

முதல் பிரதி - கவிதை பழக ஆரம்பித்த போது கிறுக்கியவை

ஒரு சொல் - பகுப்புகளுக்கு உட்படாத மற்ற கவிதைகள்