
உன்னருகே அமர்ந்துன்னை
வார்த்தைகளால்
வரைந்து கொண்டிருக்கிறேன்.
ஏனிப்படி பார்க்கின்றாயென
நீ எழுப்பா கேள்விக்கும்
பதில் தயார் நிலையில்
என் வசம்.
புருவமுயர்த்தி கண்கள் இடுக்கி
உதடு சுழித்து
யோசிக்கும் நாழிகையில்
உன் நாடிகளில் தாளமிடுமந்த
மென்விரல்களின் லயமும்
அனிச்சையாய் அவ்வப்போது
முன் வழிகிற சிகை திருத்தும்
லாவகமும்
பரிகசித்து பொய் கோபம் காட்டி
கழுத்துக் காம்பொடித்து
முகமலர் தாழ்த்தி
போவென சொல்லுமந்த நளினங்களும்
வசப்படுகின்றன வார்த்தைகளுக்குள்
கொஞ்சமேனும்.