
பழைய பொருட்களால் சூல் கொண்ட
மரப்பெட்டி போல்
நினைவுகள் தேக்கிக் கிடக்கிறதென்
மனப்பெட்டி.
எதிர்வீட்டு பாலுவின் பச்சைப் பம்பரம்
முன்னா வீட்டில் பார்த்த பொம்மைப் படம்
பூப்போட்ட சிவப்புச் சட்டை
தாத்தா கதைகளில் வரும் ஈனாப் பூச்சிகள்
நம்மைத் துரத்தும்முன் ஓடிவிடலாம்
என் வயது பத்து.
பயம் படியென்ன விலை
வாழ்க்கையே திருவிழாவாய்...
அப்பக்கம் பாராதிருங்கள்
என் இச்சைகளின் எச்சங்களங்கே
மண்டிக்கிடக்கின்றன.
வயது பதினெட்டு.
கரைந்து போன கனவுலகம்
திணறடிக்கும்
யதார்த்த உலகின் இயலாமைகள்
அதோ கொடிகளில் காயுமென்
நம்பிக்கைச் சட்டைகள்...
முப்பத்தியைந்து.
சற்றே பொறுங்கள்
கதைத்ததில் மறந்தே போனேன்.
எனக்கு இன்சுலின் குத்த வரும்
செவிலியின் வருகையை...
அறுபது.
6 comments:
வாழ்க்கை ஓட்டத்தில் நினைவு குவியல் சேகரித்த மனப் பெட்டி அழகு வருணன்..
//பயம் படியென்ன விலை
நம்பிக்கைச் சட்டைகள்...//
ஒரேவரியில் அந்தநிலையின் ஆழம்!
ம்...
குட்.
நன்றி பாலா.
வருகைக்கு நன்றி நண்டு...
நன்றி கோபி.
Post a Comment