
பண்டிகை காலங்களின்
இரவல் கூதூகலங்களுக்குப்
பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய
கடன்களின் கணக்கீடுகளால்
சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும்
நடுத்தர குடும்பத் தலைவர்களுள்
ஒருவனாய் நானும்;
இவ்வமயம் எனதிந்த அமர்வும்.
காமப் பாற்கடலில்
கடைந்தெடுத்த அமிழ்தங்களாய்
மழலைகள் இல்லாதிருந்திருந்தால் நலம்.
கடைவதற்கு அசுரர் போல நானிருக்கையில்
துணைக்கு தேவர் போல இல்லாள்
இல்லாதிருந்திருந்தால் இன்னும் நலம்.
இதற்கும் மேலே
இருப்பின் பிரக்ஞையும்
வாழ்வு குறித்த அவதானங்களும் அவசியப்படும்
நரனாய் ஜனிக்காதிருந்திருந்தால்
இன்னும் இன்னும் நலம்.
’கப்பல்கள் கரைகளில் பாதுக்காப்பாய் இருக்கும்
ஆனால் அதற்காய் அவை கட்டப்படுவதில்லை’
எனும் ஜான் ஷீடின்
மேற்கோளை மடிக்கணிணியின்
முகப்புப் படமாய் வைத்து
“அப்பா எப்படி?” என்கிறாள்
மலர்ச்சியாய் மகள்.
“ம்...
மிக நன்று”, நான்.
ஓய்தல் மீண்டு
எழுப்பப் பட்டேன் மீண்டும்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (14.11.10) இணைய தளத்திற்கு நன்றி.
2 comments:
விட்டு விடுதலையாகி விட வேண்டுமென்ற நினைவு சில வேளைகளில் வரும்..
அந்த நினைவு இக்கவிதையில் கண்டேன்..
அருமை வருணன்..
அதே மனநிலையுடன் தான் இக்கவிதையையும் எழுதினேன் பாலா...
Post a Comment