சே மருத்துவத்தை தேர்வு செய்ததற்கான காரணங்கள் புறவியலாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அத்துறையின் பால் ஒரு உள்ளார்ந்த தேடலால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. 1948 ஆம் ஆண்டு சே பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்திற்குள் மருத்துவம் பயில காலடி எடுத்து வைத்தார். அவர் ஒரு பயணப் பிரியர். ஒரு இடத்தில் இருப்பதென்பது அவருக்குப் பிடித்தமில்லாத ஒன்று. பயணங்களால் நிறைந்தது சேவின் வாழ்க்கை. அவரது மனதில் கனன்று கொண்டிருந்த தீராத தேடல் அவரை பயணங்களின் காதலன் ஆக்கியது. தனது மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் இரு பெரும் பயணங்களை மேற்கொண்டார்.

1950ல் தன்னந்தனியாக முதலாவதாக பயணம் ஒரு மோட்டர் பொருத்திய மிதிவண்டியில். அது ஒரு 4500 கிலோ மீட்டர் பயணம். அதற்கு அடுத்த வருடத்திலேயே அவ்ர் தனது நண்பர் ஆல்பெர்டோ கிரானடோ (அவர் இந்த வருடம் தான் இறந்தார்.) ஏறக்குறைய தென்னமேரிக்க கண்டம் முழுவதையும் கடக்கும் ஒரு மாபெரும் 8000 கிலோ மீட்டர் பயணமாக அது அமைந்தது.

சே எனும் 24 வயது இளைஞனின் பார்வையை மொத்தமாக புரட்டிப் போட்டது இப்பயணமே. இப்பயணத்தின் வழியில் பார்த்த எல்லா லத்தீன் அமெரிக்க தேசத்திலும் ஒரு விசயம் பொதுவானதாக இருந்தது. அது உழைக்கும் வர்க்கம் அடிமைச் சூழலில் சிக்கித் தவித்தது. வழியெங்கும் அவர் விவசாயிகள் நிலக்கிழார்களுக்கு அடிமைகளாகவும், பாட்டாளிகள் பெருமுதலாளிகளுக்கு கீழே உரிமைகள் தொலைத்த கூட்டமாகவும் இருப்பதை கண்கூடாகக் கண்டார். தன் கண்ணெதிரே ஏகாதிபத்தியம் எனும் திமிங்கலம் லத்தீன் அமேரிக்காவை அப்படியே முழுவதுமாக மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கொதித்துப் போனார் சே. ஒருங்கிணைந்த- லத்தீன பாரம்பரியத்தை கொண்ட- ஒரு “ஹிஸ்பானிக் அமெரிக்கா”, எனும் பெரும் கனவு சேவின் மனதை வியாபிக்க ஆரம்பித்தது அந்த தருணத்தில் இருந்து தான்.
வறுமையாலும், பசியாலும் அல்லல்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதல் சேவிற்கு ஏற்பட இப்பயணம் துவக்கப் புள்ளியாக இருந்தது. இப்பயணத்தின் போதுதான், சே தானே பிரியப்பட்டு பெரு நாட்டிலுள்ள தொழுநோயாளிகள் காலனியில் சிறிது காலம் தங்கி அவர்களுக்கு சேவை செய்தார். அவரது பயணக் குறிப்புகள் பின்னாளில் “ The Motorcycle Diaries” என புத்தகமாக வெளிவந்தது. இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் 2004ல் ஸ்பானியத் திரைப்படமாகவும் வெளிவந்தது.

சேவின் சமூகவியல் ரீதியான, அரசியல் ரீதியான பார்வை மாற்றத்திற்கு அப்பயணத்தின் ஊடே அவர் சந்தித்த சில மனிதர்களும் அவர்களுடைய நிலைப்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பயணத்தின் முடிவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிய சே விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார். 1953 ஆண்டு படிப்பை முடித்து டாக்டர். எர்னஸ்டோ ஆனார், சே.
குறிப்பு: படங்கள் அனைத்தும் பிற இணைய தளங்களினின்று பெறப்பட்டது.
 
 
 

3 comments:
சே -பற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
சேகுவேரா வாழ்க்கை படித்திருக்கிறேன். மீள் பார்வைக்கு கொணர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..
நல்ல விசயம். தொடருங்கள். :)
நன்றி இராஜெஸ்வரி..
நன்றி பூமகள். இது போன்ற ஆளுமைகளின் வாழ்வை எத்தனை முறையானாலும் மீள் பார்வைக்கு உட்படுத்தலாம் ! மறுபிரதியாக்கம் செய்யும் போதெல்லாம் ஒருவறேனும் சே எனும் ஆளுமையை, அதன் சகல பரிமாணங்களுடன் தேடத் துவங்கும் ஆரம்பப் புள்ளியாக அது இருந்தால் நான் மகிழ்வேன்...
நளினமான பெயர் தங்களுக்கு...
Post a Comment