
கடல் அழகானது. இரவில் கடல் இன்னும் அழகானது. பணியின் சுமையால் இயந்தரத்தனமான மனித வாழ்க்கையில், நின்று நிதானித்து சுற்றியுள்ள இயற்கையின் எழிலை ரசித்திடவும் பொழுதில்லை, நம்மில் பலருக்கு. அளவற்ற மகிழ்ச்சியை இலவசமாகவே அள்ளித் தரும் இயற்கை அன்னையின் அரவணக்கும் கரங்களை உதறி விட்டு, மிணுக்கும் போலித்தனமான செயற்கைத்தனங்களின் முந்தானைப் பற்றி அதன் பின்னே போகும் மதிகெட்ட பிறவியாக மனித இனம் மாறிப் போனது வருத்தமே.
கவலையால் துவண்ட மனதினை மெல்லிய தென்றலால் துவட்டி புத்தியிரூட்டி மகிழ்ச்சி பொங்க அலைக் கரம் அசைத்து வழியனுப்பி வைக்கும் இலவச மருத்துவ சாலை கடற்கரை. நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான் மனிதனுக்கு பொறுமையில்லை. கரையில் நின்றபடி கால்களை வருடிட காதலோடு வரும் அலைகளை ரசிப்பது ஒரு கலை. இரவின் நிசப்தத்தில், சித்ரா பௌர்ணமியன்று அமைதியான கடல் வீட்டின் முற்றத்தில் தஞ்சம் புகுந்தேன். மனதை மயக்கும் மெல்லிசையாய் அலை ஓசை. போட்டிருந்த கதராடையை நெகிழ்த்தி நெகிழ்த்தி விளையாடியது மென்காற்று. வெளிச்சப் பூக்களை அசைவாடும் நீர் பரப்பில் அள்ளி வீசி அமைதியாய் முழுமதி. தாழ்வதும் எழுவதுமாய் தண்ணீர்; உடைந்த கண்ணாடிச் சில்லுகளைப் போல மின்னிக் கொண்டிருந்தது.
நாடி வருகின்ற யாவருகும் பராபட்சமின்றி நிம்மதி அமிழ்தம் ஊட்டுகின்றாள் இயற்கை அன்னை. அவளின் மகவுகளான நாம் மட்டும் இனத்தால், மொழியால், மதத்தால், நிறத்தால், நாமே வகுத்துக் கொண்ட இல்லாத எல்லைகளால் பிரிந்து தீவுக் கூட்டங்களாய் கிடப்பது முரணே.
அதிகபட்சம் ஒரு இருபது நிமிடங்களே நின்றிருப்பேன் இரவின் மடியில், கடலின் கரையில். அதற்குள் ஒரு வார பணிக் களைப்பை, மனதின் கவலைகளை துரத்தி விட்டது அக்கணம். ஏமாற்றங்களால் அயர்ந்திருந்த இதயத்தின் ரணப்பட்ட துவாரங்களை தனது வசீகரத்தால் அடைத்து, காயம்பட்ட இதயத்தினை மயிற்பீலிகள் கொண்டு வருடுதல் போல நீவி விட்டு இதமளித்தது கடல். மென்மையாய் பாதத்தினை அலையின் இதழ் முத்தமிட, மனமின்றி விடை பெற்றேன். தன்னை விட்டுப் போகும் எனக்கு வாழ்வின் ரகசியங்களையும் தவறவிட்ட அதன் சிறு சிறு அழகுகளையும் காதோரம் முணுமுணுத்து தோள் தட்டி வழியனுப்பி வைத்தது தென்றல்.
4 comments:
உண்மைதான் நண்பரே. அந்த நீண்ட நீலப் பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். என் மனைவி அடிக்கடி சொல்வது, யானை கடல் இரண்டையும் பார்த்தால் நம் மனதில் உள்ள சோகம் மறையும்
அழகான நடையில் கடலின் ரம்மியம் உங்கள் எழுத்தில் வருணன்! :)
miga azhalkaga kuri ullirkal iyarkai annaiyn azhakai.katavl kotutha varam,ilavasa maruthuvar aanal naamthan payanpatutha thavarukirom.vazhathukal
நன்றி எல்.கே. தங்களை வரவெற்கிறேன்.
வருக பாலா... தேர்வுகள் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறதென நம்புகிறேன்.
நன்றி ஷீலா. மனிதன் இன்னும் நிறைய எளிய மகிழ்ச்சிகளை இழந்து கொண்டேதான் இருக்கிறான்...
Post a Comment