
நாம் கல்வி கற்க ஆரம்பித்த பால்ய காலம் தொட்டே வாசிப்பதற்கு நிர்பந்திக்கப் படுகிறோம். சிந்திக்கத் தெரிந்த மனித மனதின் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாக வாசிப்பு இருந்து வருகின்றது. ஆனால் தற்போதுள்ள சூழலில் இளைய தலைமுறையினரிடயே- பொதுவாக பார்க்கும் போது- வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது கண்கூடு. சதா அவர்களின் கைகளில் பாடப் புத்தகங்களைத் திணித்து படி படியென நாம் இம்சிப்பதாலேயே, அவர்களுக்கு புத்தகமென்றாலெ ஒருவித வெறுப்புணர்வு வந்துவிட்டதென நினைக்கிறேன். அதனாலேயே அவர்கள் மொழிப் பாடங்களில் வருகின்ற துணைப் பாடப் பகுதிகள், கவிதைகள் என சகலத்தையும் பாடமாகவே பாவித்து வெறுத்து கடமைக்கென மனப்பாடம் செய்கிற அவலத்தை ஒரு ஆசிரியனாக நான் அன்றாடம் பார்த்த வண்ணம் இருக்க வேண்டியுள்ளது.
என்னுடைய பதின்ம வயதில் நான் கல்லூரியில் இளநிலையில் இருந்த போது முதன் முதலாக கல்லூரி நூலகத்திற்குள் அடியெடுத்து வைத்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில் அமர்ந்திருக்கிறது. பள்ளி வயதில் நான் அதிகபட்சமாக வாசித்தது சிறுவர் மலரும், படக் கதைகளும், நீதிக் கதைகளும், ஆனந்த விகடனும் தான். எனது வாசிப்பு அந்த நிலையிலேயே தேங்கி விட்டது. கல்லூரி நூலகத்திற்கு சென்ற தருணம் கூட மிக தற்ச்செயலானதே. வழக்கமாக நானும் எனது நெருங்கிய தோழர்கள் இருவரும், ஆக மூன்று பேராக வலம் வருவோம். அந்த நாளில் அவர்கள் இருவருமே ஏதோ காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை. எனக்கோ தனித்து எங்கும் செல்ல பிரியமில்ல்லை. கால் போன போக்கில் கல்லுரிக்குள் நடை போட்டதில், கால்கள் நேராக அமெரிக்கன் கல்லுரியின் பிரம்மாண்டமான DPM நூலகத்தின் முன் சென்று இளைப்பாறின. புத்தக உலகில் எனது சஞ்சாரம் அப்படித்தான் ஆரம்பித்தது.
துவக்கத்தில் வெறுமனே தகவல் களஞ்சியத்தில் படம் பார்ப்பதில் ஆரம்பித்து, பின்னர் அப்படங்களுக்கு அடியில் இருக்கும் சிறு குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தக தேவதை வாசிப்பு அனுபவமேனும் அமிழ்தம் தர ஆரம்பித்தாள். வாசிப்பு எனது எந்த அளவிற்கு நமது பார்வையை, புரிதலை செம்மைப் படுத்தி, நமது ஒட்டுமொத்த ஆளுமையையும் வளர்த்தெடுக்கிறது என வாசிக்கிற அனைவருமே ஏதாவதொரு கட்டத்தில் உணரலாம்.
வாசிப்பு ஒரு மாயம் போல. வாசிப்பிற்கு முன்பிருந்த ’நான்’ இல்லை இப்போது. எப்படி எங்கணம் மாறினேன் என்பது பிடிபடவில்லை. ஒன்றுமில்லாத தரிசு மனதை சிந்தனை நந்தவனமாக மாற்றிடும் ரசவாதம் வாசிப்பு. ஒவ்வொரு முறையும் புதிய சன்னல்களை திறந்து வைத்து, புதிய பாதைகளைக் காட்டிடும் கைவிளக்கு அது. பொதுவாக நாம் யாருக்காவது, எதற்காவது காத்திருப்பது என்பது யாருக்கும் பிடித்தமான காரியமில்லை. காத்திருப்பது என்பது ஒருவித சலிப்பைத் தருகின்றது. எதனையும் உடனே எதிர்பார்த்திடும் மனித மனம், காத்திருப்பை ஆமோதிப்பதில்லை ஒரு போதும். ஆனால் ஒரு புத்தகம் கைகளில் இருந்தால் நிலைமையே வேறு. கரைகின்ற காலப் பிரக்ஞை இல்லாது எழுத்துக்குள் அமிழ்ந்துவிடும் மனது.
தனிமை மட்டுமே மண்டிக் கிடந்த எனது வாழ்வின் பெரும் பகுதியில் எனக்கு கை கொடுத்தது புத்தகங்கள் தான். எனக்கான உலகம் செய்து நானதில் வாசம் செய்திட வழி விட்டதும் புத்தகங்கள் தான். ஒவ்வொரு முறை ஒரு புத்தகத்தை கைகளில் ஏந்தும் போது அதன் வாசனை நாசியைச் சுண்டுயிழுக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு வாசனை. அது தனித்துவமானது, நங்கையின் கூந்தல் மணத்தைப் போல. கால நேரம் மறந்து சயனம் துறந்து, நிசியைக் தனித்தே கடக்கும் கடிகார முட்களுக்கு துணையிருந்த பொழுதுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
வயது ஏற ஏற நாம் நினைத்திருந்த உலகம் நமது எதிர்பார்ப்பின்படி இல்லாது, தனது சகல நன்மைத்தனங்களையும், பரிசுத்தங்களையும் களைந்து யதார்த்த சவுக்கைச் சுண்டுகிறது. கிட்டத்தட்ட நம்மில் யாருமே இந்த சவுக்கடிக்கு தப்பியிருக்க வாய்ப்பில்லை. நிராயுதபாணியாக இவ்வுலகையும், இவ்வாழ்க்கையையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயங்களுக்குள் தள்ளப்படுகின்றோம். மூச்சு முட்டி நாம் அயர்ந்து போகின்ற போது நமக்கு ஆறுதலாய் சாய தோள் கொடுப்பது வாசிப்பே.
7 comments:
வாச்சிப்பின் சுகானுபவமே என்னையும் வழிநடத்துகிறது...
வாசிப்பின் ஆனந்த அனுபவங்களுக்குப் பாராட்டுக்களும் புத்தாண்டின் இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்களும்.
நன்றி கே.ஆர்.பி. வாசிப்பனுபவம் நிச்சயம் ஒப்புமை கூற இயலாத சுக அனுபவமெ.
நன்றி ராஜெஸ்வரி. பிறந்த ஆண்டு அனைவருக்குமே வளமும், நலமும், அமைதியும் அருளட்டும்..
அருமை அருமை நானும் புத்தகங்களை காதலிக்கிறேன்.
வாசிப்புதான் ஒரு மனிதனை மேம்படுத்தும்.
தொடர்ந்து வாசிக்க வாழ்த்துக்கள் நண்பா... வருகைக்கு நன்றி.
//மூச்சு முட்டி நாம் அயர்ந்து போகின்ற போது நமக்கு ஆறுதலாய் சாய தோள் கொடுப்பது வாசிப்பே.//
மிக சரியே வருணன் ! வாசிப்பு மனிதனை பக்குவபடுத்தும். புத்தகங்களே சிறந்த நண்பன் !
உங்கள் வாசிப்பின் அனுபவம் தான் பலருக்கும் என நினைக்கிறேன் அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி கௌசல்யா. தொடர்ந்து இணைந்திருங்கள்...
Post a Comment