எனக்கு அருகிலேயே நீயிருந்தும் உன்னை சந்திக்கமுடியாத சூழலில் ஏதோ சொல்லவியலா காரணத்தால் தன் கூட்டை அண்டாத பறவையின் நிம்மதியின்மையை ஒத்த ஒன்று பற்றிக் கொள்ளும் இருதயத்தை கூடவே வந்து சேரும் ஈன்ற குட்டியை மறுகணமே பிரிந்திடும் தாய் நாயின் வருத்தங்களை ஒத்ததொரு வெறுமை.
என் கவிதைகள் உன்னிலிருந்து தான் ஜனித்துக் கொண்டிருந்தன. இப்போதுன் மௌனத்தினின்றும் அருகிலிருக்கும் தூரத்தினின்றும் அனுபவித்துணராத உன் ஸ்பரிசங்களினின்றும் நிச்சயிக்கப்பட்ட விடுபடல்களினின்றும் முன்தயாரிப்புள்ள விலகல்களினின்றும் மற்றவரறியா உன் தயக்கங்களினின்றும் ...
என்னை வெளியேறச் சொல்லும் நம் சூழ்நிலைகளின் நிர்பந்தங்கள் இருக்க சொல்லி யாசிக்கும் உன் விழிகள் என் முடிவுகளும் நிலைப்பாடுகளும் இதில் எதை சார்திருத்தல் வேண்டும் ?
கண்களால் ஆயுதம் செய்யும் சூத்திரமறிந்த நீ புரியாதது போல பிறகாவது நானாவெனச் சிணுங்கிய ஒவ்வொரு முறையும் என்னை இழக்கவாரம்பித்திருந்தேன் கொஞ்சம் கொஞ்சமாய்.