யாதும் நலம்

Tuesday, November 16, 2010



பண்டிகை காலங்களின்
இரவல் கூதூகலங்களுக்குப்
பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய
கடன்களின் கணக்கீடுகளால்
சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும்
நடுத்தர குடும்பத் தலைவர்களுள்
ஒருவனாய் நானும்;
இவ்வமயம் எனதிந்த அமர்வும்.

காமப் பாற்கடலில்
கடைந்தெடுத்த அமிழ்தங்களாய்
மழலைகள் இல்லாதிருந்திருந்தால் நலம்.

கடைவதற்கு அசுரர் போல நானிருக்கையில்
துணைக்கு தேவர் போல இல்லாள்
இல்லாதிருந்திருந்தால் இன்னும் நலம்.

இதற்கும் மேலே
இருப்பின் பிரக்ஞையும்
வாழ்வு குறித்த அவதானங்களும் அவசியப்படும்
நரனாய் ஜனிக்காதிருந்திருந்தால்
இன்னும் இன்னும் நலம்.

’கப்பல்கள் கரைகளில் பாதுக்காப்பாய் இருக்கும்
ஆனால் அதற்காய் அவை கட்டப்படுவதில்லை’
எனும் ஜான் ஷீடின்
மேற்கோளை மடிக்கணிணியின்
முகப்புப் படமாய் வைத்து
“அப்பா எப்படி?” என்கிறாள்
மலர்ச்சியாய் மகள்.

“ம்...
மிக நன்று”, நான்.
ஓய்தல் மீண்டு
எழுப்பப் பட்டேன் மீண்டும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (14.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

மௌன ராகம்-IV

Saturday, November 13, 2010



நாம் பேசாத வார்த்தைகளை
எல்லாம் என் மரங்களில்
தூளி கட்டி சேமிக்கிறேன்.
விடைபெறும் ஒவ்வொரு தருணத்திலும்
என் மரங்களில் ஏதெனும் ஒன்றில்
அந்நாளுக்குரிய ஒற்றை தூளி
ஏறியமர்கின்றது.
பருவமாற்றம் நிகழ்த்திய பெருங்காற்றில்
ஓர் அந்தியில் தூளிகளனைத்தும்
ஒரு சேர அறுந்து
காற்றில் சிதறுகின்றன வார்த்தைகள்
நாம் பரிமாறிட கூச்சப்பட்டு சேமித்த
வார்த்தைகள் அனைத் துமிப்போது
பெருமழையாய் பொழிகிறது எங்கும்
வெட்கம் மிச்சமிருக்க நாணியபடி
மறைவிடம் தேடி ஓடுகிறோம் இருவரும்
அப்பெருமழையில் நனையாதிருக்க
யாருமற்ற பெருவெளியை நனைத்துக்
கரைகின்றன அவை.

உள்ளொன்று வைத்து…

Wednesday, November 10, 2010



வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள்
முயல் குட்டி துள்ளுகிறது
தவழும் முகில் யானையாய்
துதிக்கை உயர்த்துகிறது.
பேருந்து நிலையச் சுவற்றின்
அழுக்குக் கறைகள்
கொம்பிலா ஆநிரையாகவும்
ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும்
ஆகின்றன.
சிந்திய சில துளி குளிர்பானம்
பெயர் தெரியா தூர தேசத்தின்
ஆரஞ்சு வண்ண வரைபடமாகிறது.
அரூபங்களில் கூட ரூபங்களை
பிரசவிக்கும் என் விழிகள்
கடவுளாகின்றன.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (07.11.10) இணைய தளத்திற்கு நன்றி.