
ஒரு சராசரி தமிழனின் கனவு மூட்டைக்குள் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொன் முட்டை. கனவுகள் பலவிதம். திரை நட்சத்திரமாக வேண்டுமெனவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலொச்சி லட்சங்களில் சம்பாதிக்கும் ஆசைகளுடனும் ஒரு கூட்டம் ஒரு புறம். அன்றாட வாழ்வின் தேவைகளை இப்பெருநகருள் பூர்த்தி செய்து கொள்ள திண்டாடும் ஒரு பெருங்கூட்டம், மறுபுறம். உயர் நடுத்தர நண்பனொருவனின் அழைப்பின் பேரில் பல ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு வந்துள்ளேன்.
பேருந்து நிறுத்தங்களில் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு இளைஞனின் மனோநிலையுடன் இருக்கும் போது, காரில் பயண்ம் செய்வதென்பது சற்று தர்மசங்கடமான தருணமாகவே எனக்கு இருந்தது. பின் மாலைப் பொழுதுகளில் தோழனுடன் வெளியே செல்கையில், தெருவெல்லாம் நிறைந்திருக்கின்றன முகங்கள். கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்திடும் முகங்கள். பணிச்சுமை மூடை மூடையாய் ஏற்றி வைத்த அசதி படர்ந்த முகத்துடன் எண்ணற்ற ஆத்துமாக்கள். சொகுசு வாகனத்தின் வெளியே இருப்பவனின் மனோநிலையில் இருந்து கொண்டு குளிரும் வாகனத்தின் உள்ளே கசியும் இசையினூடே அமர்ந்தபடி அவனயே பார்ப்பது மிகவும் இக்கட்டான சூழல் கொண்ட ஒரு அனுபவமாக இருந்தது.
காசு வைத்திருப்பவனுக்கு மட்டுமே ஆனந்தம் அருளும் மெட்ரோ நகரங்களுக்கு சென்னை ஒன்றும் விதிவிலக்கல்ல. வயிற்றின் பசி கண்களில் தெரியும் ஆத்மாக்கள் வாழும் இதே நிலத்தில், நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் வலியச் சென்று சிக்கி அதன் அத்தனை பரிமாணங்களையும் ருசித்திடத் துடிக்கும் ஆத்மாக்களும் வாழ்கின்றனர். கடக்கின்ற யுவதிகளில் பெரும்பான்மையோர் அயற்சியால் தளர்ந்த நடையுடன் யாருடனோ அலைபேசியில் கதைத்தபடி. மனிதர்கள் (கிட்டத்தட்ட) அனைவருமே யந்திரர் போல நடமாடுகின்றனர். மனிதமும், சக மனித வாஞ்சையும் தளும்பும் முகங்கள் கிடைத்தற்கரியவை இந்நகரத்தில். பார்வைகள் இரண்டு விதம். ஒன்று ஏக்கப் பார்வை. இதனைச் பெரும்பான்மையாய் பார்க்கலாம். மற்றது பெருமிதப் பார்வை. இப்பார்வையைச் சுமக்கும் முகங்களில் கொஞ்சம் கூட தெரிவதில்லை, அவர்கள் அப்பெருமிதத்தை தங்கள் நிம்மதியை அடகு வைத்தே அடைந்தனர் எனும் உண்மையின் நிழல். ஒரு வேளை அவர்களே அதனை மறக்க முயல்கின்றனரோ?
அண்ணா சாலையின் உயரமான வியாபார மையங்களை கடக்கிறது எங்கள் வாகனம். ”நண்பா, எக்ஸ்பிரஸ் அவென்யு போயிருக்கியா?” என தோழனின் குரல். இல்லை என நான் தலையை இடமும் வலமும் அசைக்க, சொன்னான், “ நாளைக்குப் போகலாண்டா”... சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தின் ஒரு வசனத்தை அனிச்சையாய் முணுமுணுத்தது உதடுகள்... “என்ன வாழ்க்கடா இது?!”
5 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
வயிற்றின் பசி கண்களில் தெரியும் ஆத்மாக்கள் வாழும் இதே நிலத்தில், நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் வலியச் சென்று சிக்கி அதன் அத்தனை பரிமாணங்களையும் ருசித்திடத் துடிக்கும் ஆத்மாக்களும் வாழ்கின்றனர்.
நல்ல பதிவு நண்பரே..
நன்றி ரத்னவேல் ஐயா.
நன்றி கோவி.
very nice varunan.
நன்றி ஷீலா...
Post a Comment