வெயில்

Thursday, October 28, 2010



நேற்றைக்கு முளை விட்ட
சிறுவிதையின் இருப்பு
சுவடின்றி பிடுங்கப்படுகிறது
இன்றொரு சூறைக்காற்றால்
கருவறையில் சுமந்திடும் கணக்கற்ற
பிள்ளைகளோடு முனங்கிக் கொண்டேயிருக்கிறது
பெருங்கடலொன்று அலை அலையாய்
மேகம் இழுத்து தாகம் தணித்திட
மேலெழும்பும் கோடையின் வெம்மை
தோற்று திரும்புகிறது
வறண்ட நிலத்தின் சுருக்கங்களை
முத்தமிட மீண்டுமொரு முறை
புழுக்கம் நிறைந்த அனாதை ராவொன்றில்
மனதின் ரணங்களை நக்கியபடி அலைகின்றன
நாலைந்து நினைவு நாய்கள்
உறங்காத என் தலையணையைச் சுற்றியபடி.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10) இணைய தளத்திற்கு நன்றி.

தந்தையாதல்

Tuesday, October 26, 2010




அகால வேளைகளில்
தொந்தி சரிய அயர்ந்துறங்கும்
துணைவியினுள்ளே துள்ளல்
காணும் கணங்களில்
அவளை துயிலெழுப்பாமல்
வருடும் நடுங்கும் விரல்கள்.

தாயாகும் பூரிப்பினிடையே
பயங்கள் மிதக்கும்
மிரட்சிக் கண்களுருளும்
முகத்தை ஆதரவாய்
வருடும் கரங்கள்

வேறெப்போதிலும் தராத
பயத்தின் வர்ணங்களை
வரிந்து கொள்ளும்
மருத்துவமனையின் வெண்மை

குறுக்கும் நெடுக்குமாய்
ஆஸ்பத்திரி செவிலிகள்
பயணிப்பர் தடதடக்குமென்
இதயத் தண்டவாளத்தின் மேலே
பதிலேதும் சொல்லாமல்

எப்போதுமில்லாமல்
மனம் அரற்றியபடி
ஏங்கிக் கிடக்கும்
ஒற்றை அலறலுக்கும்
அதைத் தொடரும் அழுகுரலுக்கும்.

தவிப்புகளுக்கு மத்தியில்
தந்தையாதலும் மறுபிறப்பே
மங்கையின்
தலைப் பிரசவத்தைப் போல.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10)இணைய இதழுக்கு நன்றி

மௌன ராகம் - I

Sunday, October 24, 2010



கடற்கரையில் அமர்ந்திருக்கும்
என்னருகேயிருந்து
முடிவின்றி நீள்கின்றதுன்
பாதச் சுவடுகள்,
உன்னிலிருந்து கிளை பரப்பிய
ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும்
அதன் விதைகள் குறித்து
என்னுள் எழும் கேள்விகளைப் போல.
உலகப் பெருங்கவியாயினும்
உன்னைப் பற்றியெனின்
ஒரு ஆச்சரியக் குறியைத் தவிர
வேறேதும் எழுதப் போவதில்லை;
அதுவே என்னைக் குறித்தென்றால்
அந்த குறியின் நிமிர்ந்த தலை வளைத்து
கொக்கியாக்கி எனைக் கண்டு நகைப்பான்
என்றேன் – இதில்
எது உன்னை கோபத்திலாழ்த்தியது ?