மௌன ராகம்-III

Sunday, November 7, 2010



கவிதைகள் வார்த்தைகள்
ஏதுமின்றியும் எழுதி
வாசிக்கப்படலாம் !
வார்த்தைச் சட்டங்களுக்குள்
கவிதைகள் அடங்கிவிடுவதில்லை
எல்லா சந்தர்ப்பங்களிலும்

எதிரெதிரே அமர்ந்தவண்ணம்
விழிகள் துளைத்து நாமிருவரும்
உற்று நோக்குவதை என்னவென்று சொல்வாய்?

மௌன ராகம்-II

Wednesday, November 3, 2010



வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும்
இடையேயான தூரம் எவ்வளவு?

கதை பேசாது விடை தேடி
நாமிருவரும் எதிரெதிரே

தூரத்துத் தெருவிளக்கும், சில
சில்வண்டுகளும் சாட்சிகளாய்

பனியாய் உருகும் நேரம் நம்மிடையே...

வார்தைகளற்று விழியால் புசிப்பதைத் தவிர
வேறேதும் செய்யவில்லை இருவருமே

பட்டாம்பூச்சியாய் படபடக்குமுன்
விழிகள் பார்க்கையில்
விட்டிலாய் துடிக்கும் மனது
பேசிவிட...

கண்டோம் இறுதியில்
வார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமான
தூரங்கள் நம் கர்வத்தால்
அளக்கப்படுகிறதென்பதை...

தெரிந்தும் நாம் பேசவில்லை.

என்னிதழ் பூட்டினைத் திறந்திட
இதொ நெருங்கி வருகிறது
உன் சாவி !

நிழல் வேண்டும் காலம்

Monday, November 1, 2010



ரௌத்திரம் பழகியிராதது தவறோவென
எண்ணத் தூண்டும்
அசௌகரிய தருணங்கள்
பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும்
கரிசனங்களும் போலியேனப்
புலப்படும் வேளைகளில்
படரும் விரக்தியின் நிழல்
ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு
நீர்த்துப் போகிறது
நிசத்தின் பாரபட்சமற்ற குரூரத்தால்
புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென
புண்பட்டுத் தோற்ற வெட்கம் தின்ன
சலனமடங்கிய சவத்தைப் போல
யாருமற்று அனல் தகிக்கும்
இம்முடிவிலா பாதையில் இதப்படுத்த
ஒரு காட்டுப் பூவேனும் வழியிலிருந்தால் நலம்
குறிப்பாக தெரிந்தே தோற்கின்ற
இக்காலங்களிலேனும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(31.10.10) இணைய தளத்திற்கு நன்றி