
தூறலூசி கோர்த்து
மழை நூல் தைத்த
ஈர உடையுடுத்தி மினுக்குகிறது
யாருமற்ற சாலை.
நகர மறுத்த வாகனம் விடுத்து
நடைபயின்றோம்.
தலை முதல் பாதம் வரை
நனைத்து நழுவுகிறது நீராய்
புகை மேகம்.
இறுகும் கைகளை பற்றிச் சுருளும்
சாரல் கொடியொன்று இறுக்குகிறது
கரங்களோடு இதயங்களையும்
முழுக்க நனைந்தும் முக்காடிட்டபடி
உடன் வருகிறாய்.
பொக்கிஷங்களைக் காக்கும் கர்வமின்றி
ஈரக் காற்றில் இழந்தாடிடும்
நீர் சொட்டுமுன் ஆடைகள்
வீடடைந்து உள்ளுறைந்து
உடை மாற்றி மஞ்சம் சேர்கிறோம்
நிமிடங்களில்
குளிர் நானேற்றிய வில்லினின்று
புறப்பட தயாராகின்றன
இரு காம அம்புகள்.
அமர்ந்துண்ணும் அவசியங்களற்று
படுத்தே உண்ணும்
பரவசப் பலகாரங்களாய்
துடிக்கும் நம் தேகங்கள் அருகருகே.
4 comments:
தூறலூசி கோர்த்து
மழை நூல் தைத்த
ஈர உடையுடுத்தி மினுக்குகிறது
யாருமற்ற சாலை.
அழகான கோர்வையான வரிகள் அருமை ரசித்தேன்
//தூறலூசி கோர்த்து
மழை நூல் தைத்த
ஈர உடையுடுத்தி மினுக்குகிறது
யாருமற்ற சாலை.//
saalaiyai yaarum intha alavu rasiththirukka maataargal ..arumai
அருமை கவிதை நண்பா
சசிகலா, ஜெயராம், தனசேகரன் அனைவருக்கும் மனமுவந்த நன்றிகள்... காலம் தாழ்ந்த பின்னூட்டத்திற்கு மன்னிக்க.
Post a Comment