
பிரபஞ்ச ரகசியங்களை
தன் அதரங்களில் ஒளித்து வைத்து
நிபுணி போல் வகுப்பெடுக்கிறாள்
தனக்கே தெரியாமல்...
தோள்கள் குறுக்கிய விலங்கின்
ரோமங்கள் நெகிழ்த்தி
சிறகுகள் மறந்த பறவையொன்றின்
இறகுகள் நீவுகிறாள் இதமாக,
பறத்தலுக்கான ஆயத்தமாய்
இடை யிடையே உறங்கிடும்
மகரந்தங்களை துயிலெழுப்பும்
சூட்சுமங்கள் கைகூடுமவளுக்கு
அனாயசமாக
முன்தயாரிப்புகள் ஏதுமிலாமலேயே
இந்த ரகசியங்களை
அவள் செவிமடல் வருடும்
இடைவேளைகளில் சொன்னால்
அப்படியாவென ஆச்சரியம் கூட்டுகிறாள்
கரங்கள் குவித்து வாய்பொத்தி
தேனடை காக்கும் சிறுவெண் மதிற் பற்கள்
மறைத்தும்
கன்ன மேட்டில் வெட்க வெளிச்சம்
படர விளக்குகள் ஏற்றியும்
கணங்கள் யுகங்களாகும் ரசவாதத்தின்
ஆதி நொடியில்
கரைகள் குறித்த கவலைகள் துறந்து
திசையறியா யாத்திரையில் என்னுடல்
காமப் பெரும்புனலின் இசைவிற்கேற்ப.
8 comments:
கணங்கள் யுகங்களாகும் ரசவாதத்தின்
ஆதி நொடியில்
கரைகள் குறித்த கவலைகள் துறந்து
திசையறியா யாத்திரையில்// மிகவும் அருமையான கவிதை, மிகவும் ரசித்து படித்தேன்
நன்றி Heart Rider.
நன்றி ரத்னவேல் அவர்களே.
கணங்கள் யுகங்களாகும் ரசவாதம் அழகு.
அழகு கவிதை
அருமை
அற்புதமான கவிதை நண்பரே...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
nalla kavithai ...vaalththukkal
நன்றி இராஜேஸ்வரி, கவி அழகன், நிலா ரசிகன், சௌந்தர், சரவணன்....
Post a Comment