சே III – களம் கண்ட மதக்களிறு

Friday, April 29, 2011

பெற்றோரை சரிக்கட்டியாயிற்று, மருத்துவப் பட்டத்தை பெற்றதன் மூலம். ஆனால் ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஆம். சே மற்றுமொரு பயணத்திற்குத் தயரானார். ஜூலை 7, 1953 அன்று பயணம் துவங்கியது. பயணத்தின் முடிவில், கௌதமாலாவிற்கு செல்லும் முன்னர் சே தனது அத்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தில் [10.12.1953], யுனைட்டட் பழக் கம்பெனியின் (அது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்) செயல்பாடுகள் வாயிலாக ஏகாதிபத்திய முதலைகளைப் பற்றி தெரிந்து கொண்டதாகவும், இவர்களைப் போன்றவர்களை ஒழிக்கும் வரை தான் ஓயப் போவதில்லையெனவும் எழுதியிருந்தார். அனேகமாக தனது குடும்பத்தினரிடம், தனது நிலைப்பாடுகள் குறித்து பகிரங்கமாக அவர் தெரிவித்தது இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.




அம்மாத இறுதியில் அவர் கௌதமாலாவை அடைந்த போது அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன் நில சீர்திருத்தத்தில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். அதன் மூலம் அவர் நாட்டின் பயிரிடப்படாத நிலங்கள் யாவும் பொதுவுடமையாக்கப்பட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிலத்தின் பெரும் பகுதியை கைக்குள் வைத்திருந்த யுனைட்டட் பழக் கம்பெனி, இதனால் பலத்த அடி வாங்கியது. சே மகிழ்ச்சியானார். நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அவருக்கு ஆனந்தம். அங்கெயே தங்கி தன்னைக்- ஒரு புரட்சியாளனாக, போராளியாக- கூர் தீட்டிக் கொள்ளவும் தீர்மானித்தார்.

அங்குதான் -இடதுசாரி எண்ணமுடைய- அமெரிக்க எதிர்ப்பு புரட்சி கூட்டணியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பெரு நாட்டினரான ஹில்டா காடியாவை முதலில் சந்தித்தார். அவர்கள் வாயிலாகத்தான் சே அர்பென்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளோடு அறிமுகமானார். மேலும் தனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நபராகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். சாண்டியாகோ நகரில் இருந்த “ மான்கடா இராணுவக் குடியிருப்பு தாக்கப்படது [ஜூலை26,1953]. இத்தாக்குதலின் போது சேவின் அசாத்திய துணிச்சலையும், திறமையையும் கண்டு சகாக்கள் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். புரட்சிகர எண்ணம் இருப்பினும் ஒரு உயர்குடியில் பிறந்த ஒரு மருத்துவர் எந்த அளவிற்கு யுத்த களத்தில் செயல்படுவார் என்ற நினைப்பு அவர்களிடையே இருந்தது. ஆனால் சேவின் வீரத்தைக் கண்டு அவர்கள் வாயடைத்துத் தான் போயினர். “ சே” எனும் அடைமொழி எர்னஸ்டோவோடு ஒட்டிக் கொண்டது அப்போது தான்.




ஒரு நாடு நல்ல முறையில் இருப்பது அமெரிக்காவுக்கு எப்படி பிடிக்கும்? அதுவும் தனது கம்பெனிகளை வெளியே துரத்தி தனது லாபத்தைக் குறைத்த ஒரு தேசத்தை... நல்லபடியாக அர்பென்ஸின் தலைமையிலான அரசுக்கு கம்யூனிஸ செக் நாட்டிலிருந்து வந்த இராணுவ தளவாடங்கள் குறித்து அறிந்ததுமே, சி.ஐ.ஏ- வுக்கு மூக்கு வேர்த்து விட்டது.
உடனே சகல உதவிகளையும் செய்து கார்லோஸ் அர்மாஸ் தலைமையில் ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நிறுவியது. வழியின்றி அர்பென்ஸ் மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சமடைந்தார். சேவோ அவருக்கு ஆதரவாக போராட ஆவலாயிருந்தார். அவ்வளவு நாள் அமேரிக்காவின் கவனத்தில் இல்லாத சே அதற்கு ஒரு புதிய தலைவலியானார். அமெரிக்காவுக்குத் தான் எதிரிகள் என்றாலே பிடிக்காதே. தனக்கு கட்டம் கட்டப்படுவதை அறிந்து கொண்ட அவர், சமயோசிதமாக அர்ஜெண்டின தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். ஹில்டா கைது செய்யப்பட்டார். [1955ல் சே ஹில்டாவை மணந்தார்]

இந்நிகழ்வின் மூலம் அமெரிக்கா சாதாரணமாக எடை போட்டிருந்த சேவை சரியாகப் புரிந்து கொண்டது. சேவும் அமேரிக்கா தனது நலனிற்காக எந்த அளவிற்கும் இறங்கும் எனும் நிசத்தையும் அவர் கண்கூடாகக் கண்டுகொண்டார்.






மெக்ஸிகொ வந்த சே, திருமணத்திற்கு முன் சிறிது காலம் தனது மருத்துவப் ப்ணியை செய்தார். ஒடுக்கப்பட்ட வறியவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை அவரது மனதை வெகுவாக பாதித்தது. சிறிது காலத்தில் ஜூன் 1955 வாக்கில், பழைய கௌதமாலா நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் வாயிலாக, சே ரால்ப் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவர் பிடலின் சகோதரர் (இன்று கியூப அதிபர் இவரே). அப்போது “ஜூலை26” என்ற புரட்சி இயக்கத்தை நடத்தி வந்தார். ஒரு இரவில் நிகழ்ந்தது பிடலுடனான சேவின் சந்திப்பு. நீண்டதொரு உரையாடலுக்குப் பின்னர், தனது எண்ண அலைவரிசை பிடலோடு மிகவும் ஒன்றிப் போவதை பார்த்து, தனது எஞ்சிய வாழ்க்கை பிடலுடன் தான் என முடிவே செய்து விட்டார்.



படங்கள் : 01. ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன்
02. ஹில்டாவுடன் தேனிலவில் சே
03. ரால்ப் காஸ்ட்ரோவுடன் சே.

சே II - பயணங்களின் காதலன்

Tuesday, April 26, 2011


சே மருத்துவத்தை தேர்வு செய்ததற்கான காரணங்கள் புறவியலாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அத்துறையின் பால் ஒரு உள்ளார்ந்த தேடலால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. 1948 ஆம் ஆண்டு சே பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்திற்குள் மருத்துவம் பயில காலடி எடுத்து வைத்தார். அவர் ஒரு பயணப் பிரியர். ஒரு இடத்தில் இருப்பதென்பது அவருக்குப் பிடித்தமில்லாத ஒன்று. பயணங்களால் நிறைந்தது சேவின் வாழ்க்கை. அவரது மனதில் கனன்று கொண்டிருந்த தீராத தேடல் அவரை பயணங்களின் காதலன் ஆக்கியது. தனது மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் இரு பெரும் பயணங்களை மேற்கொண்டார்.



1950ல் தன்னந்தனியாக முதலாவதாக பயணம் ஒரு மோட்டர் பொருத்திய மிதிவண்டியில். அது ஒரு 4500 கிலோ மீட்டர் பயணம். அதற்கு அடுத்த வருடத்திலேயே அவ்ர் தனது நண்பர் ஆல்பெர்டோ கிரானடோ (அவர் இந்த வருடம் தான் இறந்தார்.) ஏறக்குறைய தென்னமேரிக்க கண்டம் முழுவதையும் கடக்கும் ஒரு மாபெரும் 8000 கிலோ மீட்டர் பயணமாக அது அமைந்தது.



சே எனும் 24 வயது இளைஞனின் பார்வையை மொத்தமாக புரட்டிப் போட்டது இப்பயணமே. இப்பயணத்தின் வழியில் பார்த்த எல்லா லத்தீன் அமெரிக்க தேசத்திலும் ஒரு விசயம் பொதுவானதாக இருந்தது. அது உழைக்கும் வர்க்கம் அடிமைச் சூழலில் சிக்கித் தவித்தது. வழியெங்கும் அவர் விவசாயிகள் நிலக்கிழார்களுக்கு அடிமைகளாகவும், பாட்டாளிகள் பெருமுதலாளிகளுக்கு கீழே உரிமைகள் தொலைத்த கூட்டமாகவும் இருப்பதை கண்கூடாகக் கண்டார். தன் கண்ணெதிரே ஏகாதிபத்தியம் எனும் திமிங்கலம் லத்தீன் அமேரிக்காவை அப்படியே முழுவதுமாக மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கொதித்துப் போனார் சே. ஒருங்கிணைந்த- லத்தீன பாரம்பரியத்தை கொண்ட- ஒரு “ஹிஸ்பானிக் அமெரிக்கா”, எனும் பெரும் கனவு சேவின் மனதை வியாபிக்க ஆரம்பித்தது அந்த தருணத்தில் இருந்து தான்.

வறுமையாலும், பசியாலும் அல்லல்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதல் சேவிற்கு ஏற்பட இப்பயணம் துவக்கப் புள்ளியாக இருந்தது. இப்பயணத்தின் போதுதான், சே தானே பிரியப்பட்டு பெரு நாட்டிலுள்ள தொழுநோயாளிகள் காலனியில் சிறிது காலம் தங்கி அவர்களுக்கு சேவை செய்தார். அவரது பயணக் குறிப்புகள் பின்னாளில் “ The Motorcycle Diaries” என புத்தகமாக வெளிவந்தது. இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் 2004ல் ஸ்பானியத் திரைப்படமாகவும் வெளிவந்தது.



சேவின் சமூகவியல் ரீதியான, அரசியல் ரீதியான பார்வை மாற்றத்திற்கு அப்பயணத்தின் ஊடே அவர் சந்தித்த சில மனிதர்களும் அவர்களுடைய நிலைப்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பயணத்தின் முடிவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிய சே விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார். 1953 ஆண்டு படிப்பை முடித்து டாக்டர். எர்னஸ்டோ ஆனார், சே.



குறிப்பு: படங்கள் அனைத்தும் பிற இணைய தளங்களினின்று பெறப்பட்டது.

சே எனும் விதை- I

Saturday, April 23, 2011



ஒரு மனிதன் தலைவனாக மாறுவது எல்லா சமூகங்களிலும் இயல்பாக நடக்கின்ற ஒன்று. ஆனால் ஒரு மனிதன் ஒரு உணர்வாக மாறுகிற தருணம் மகத்தானது. ஒரு மனிதனே புரட்சி எனும் சொல்லின், அந்த மனோநிலையின் குறியீடாக மாறியிருக்கும் கதையிது.

தேசப் பற்றாளார்களை நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் தமது மக்களுக்காக, தமது தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தந்துள்ளார்கள். நமது பாரதம் உட்பட அனைத்து தேசத்திலும் அதற்கு உதாரண புருஷர்களை நம்மால் எடுத்துக் காட்டிட முடியும். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களுக்காக உழைத்து, ஏகாதிபத்தியத்தை தன் கடைசி மூச்சு வரை எதிர்த்து, அனைத்துலக மக்களின் சமத்துவத்திற்காக தனதுயிரை இத்தரணியில் விதைத்துச் சென்றவன் ஒருவன் உண்டு. அவனது கதை இது.

“ சே!” என்னும் ஒற்றைச் சொல் இன்று ஒரு ஓரெழுத்து மந்திரமாயிருக்கிறது.




அர்ஜெண்டினாவின் ரொசாரொயோ நகரில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி , குவாரா லின்ஞ் மற்றும் செலியா டி லா செர்னா ஒய் லோசா தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தார், எர்னஸ்டோ குவாரா ( இப்பெயரோடு டி லா செர்னா எனவும் சேர்த்து அழைக்கப்படுகிறார்). அவருடைய தகப்பனார் ஸ்பானிய-ஐரிஷ் பூர்வீகம் உடையவர். தாயும் தனித்துவமான பாரம்பரியம் மிக்க ஒரு மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்தவர் தான். பணத்துக்குக் குறைவில்லை. மற்றவரிடமிருந்து தனித்துவமானவர் செலியா. மேட்டுக்குடியில் பிறந்த போதும், அவர் ஒரு இடது சாரி நம்பிக்கைகள் மிக்க ஒரு சோசியலிஸ்டாக, மதஎதிர்ப்புணர்வுள்ள ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். சேவின் பல்வேறு கருத்தியல்களும், பார்வைகளும் உருவாவதில் செலியாவின் பங்கு மகத்தானது. சேவின் தந்தை துவங்கிய தொழில்கள் பலவற்றில் சோபிக்க முடியாமல் நஷ்டத்திலேயே முடிந்தது. எனினும் செலியாவிடம் இருந்த அவரது குடும்ப சொத்து அக்குடும்பத்தின் ஜீவனத்திற்கு ஆனது.



சே எனும் பெயர் எர்னஸ்ட்டோவிற்கு இடையில் தான் ஒட்டிக் கொண்டது. குவாரா எனும் குடும்பப் பெயரொடு இணைத்து ’எர்னஸ்டோ குவாரா’ என்பதே அவரது இயற்பெயர். நமது ஊரில் கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சகா என்று அழைத்துக் கொள்வார்களே, அது போல அர்த்தம் தொனிக்கும் ஒரு பேச்சு வழக்குச் சொல்லே ’சே’ .

வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் சே. அவர் குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அவரை ஒரு சாராசரி லத்தீன் அமெரிக்கனுக்கு இருக்கும் அறிவாளித்தனத்தையும் மிஞ்சிய அறீவுஜீவி சே என வர்ணிக்கிறது. இளமையிலிருந்தே புத்தகங்களாலே நிறைந்த வீட்டில் இருந்து, ஒரு முற்போக்குவாதியான தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததால் இதில் ஆச்சரியங்கள் பெரிதும் இல்லை என்றே கொள்ளலாம்.


துறுதுறு குழந்தையாக இருந்த ’சே’வை அவருடைய இரண்டாவது வயதில் தாக்கிய தீவிர ஆஸ்மா அவரை முடக்கி ஒரு ஓரமாய் சுருட்டிப் போட்டது. தனது வாழ்வின் கடைசிக் கணம் வரைக்கும் பிடிக்காத தோழனாய், அழையா விருந்தினனாய் ஆஸ்மா தன்னுடனே தங்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் தனது தாய் அளித்த நம்பிக்கையினாலும் அவரது கனிவான ஆதரவினாலும், அதனை அப்பாலகன் எதிர்கொண்டான்.
நோயின் தாக்கம் காரணமாக சேவால் எல்லா குழந்தைகளைப் போல தொடர்ச்சியாக பள்ளி செல்ல முடியவில்லை. ஆனால் அவரது தாய் அதனை ஈடு செய்தார். 1930ல் அர்ஜெண்டின தேசத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நாட்டின் அரசியல் நிலை சிக்கலான சூழ்நிலைக்குள்ளானது. சேவின் பள்ளிப் பருவம் முழுவதும் அந்த சூழல் அப்படியேதான் இருந்தது. ஆஸ்மாவை எதிர்த்து போராடி போராடி அசாதாரணமான மன வலிமையை வளர்த்துக் கொண்ட சே, பின்னாட்களில் அதனயே தனது ஆளுமையின் ஒரு மகத்தான கூறாகக் கொண்டார்.




பள்ளிப் படிப்பை முடிக்கிற தருவாயில் சேவின் பாட்டி மரணமடைந்தார். எதிர் காலம் குறித்து பெரிதும் முடிவுகள் ஏதும் எடுக்காத சே மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததற்கு இந்நிகழ்வு முக்கியமானதாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் அவரது தாயார் மார்பகப் புற்று நோயால் அவதியுற்றதும் இன்னொரு முக்கிய காரணமாக முன் வைக்கப்படுகிறது. அவருடைய குடும்பமும் அவ்வேளையில், தலைநகர் பியூனஸ் அயர்ஸிற்கு குடிபெயர்ந்திருந்தது.

சேவின் கல்லூரி வாழ்க்கை அடுத்த பதிவில்...

படங்கள் உதவி: 1. http://www.hey-che.com/quotes-from-che-guevara.html
2. விக்கிபீடியா இணையதளம் [ படத்தில் இடது ஓரத்தில் சே]
3. விக்கிபீடியா இணையதளம் [ 22 வயதில் சே]