உன்னோடிருத்தல்

Monday, August 9, 2010



நீ பருகும் நீராய் மாறி
உனக்குள் புகுவேன்
வியர்வைத் துளியாய்
உன் மீது வழிவேன்

அமரும் இருக்கையாகி
உன்னை உள்வாங்கி அணைப்பேன்

யாக்கை யுடைத்து
வளியாய் மாறி
உன்னுள் புகுவேன்

தென்றலாய் மாறி உன்
குழல் கலைத்து அதனுள்
கரைவேன்

உன்னோடிருத்தல்
மட்டுமே முக்கியம்
எதுவாய் என்பதல்ல.

கண்ணாடி வேர்கள்

Saturday, August 7, 2010



ஓங்கி வளர்ந்த நெல்மணிகள்
சிரம் தாழ்த்திப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
வேர்க் கண்ணாடிகளில்
பிரதிபலிக்கும்
உழவுக் கிழவர்களின்
முரட்டு உழைப்பை

நிலங்கள் மாறினாலும்
உழைத்துக் கொண்டுதானிருக்கின்றனர்
இடைவிடாது
மண் புழுக்களுடன்
சேர்ந்து சில மனிதர்களும்
இங்கெ...

விழி விற்று வாங்கிய வானவில்

Friday, August 6, 2010



வெளிநாட்டு வேலை
கைகொள்ளா ஊதியம்
தெரியாத ஆட்கள்தான்
அன்புக்கு ஏக்கம்தான்
பரவாயில்லை...

தேற்றுவதற்கு
டாலர் கடவுள்
இருக்கிறான்!

அபரிவிதமாய் கிடைத்தது
வகை வகையாய்
உணவும்
விதவிதமாய்
உடையும்

கொண்டு வந்து கொட்டியது
சகலத்தையும்
டாலர் குப்பை

எப்போதாவது
நினைவிற்கு வரும்
அன்னை ஆசையோடு
பிசைந்து கொடுக்கும்
சாம்பார் சாதம்...

கண்கள் குளமாகும்

அவ்வப்போது தோன்றும்
அவசரப்பட்டு ஆசையில்
விழிகளை விற்று
வானவில் வாங்கிவிட்டேனோ?