skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
5:56 PM
நீண்ட பரிசீலனைகளுக்குப் பின்னர் பரிச்சயமாகிக் கொள்கின்றன நம் விரல்கள் நடைபயிலும் சிறு மழலை போல இறுகப் பற்றியபடி துவக்கத்திலிருந்த கணநேரத் தயக்கங்களினின்று விடுபட்டு உன்னுடையதும் என்னுடையதுமான விரல்கள் மெல்ல இதழ் சேர்கின்றன. இடைவெளிகள் துறந்து கைகள் ஸ்பரிசித்த கணம் தொட்டு கவிதையாக உருமாறுகிறது மிகச்சாதாரணமாக ஆரம்பித்த அப்பயணம்... கரங்கள் பிரிந்தும் நீட்சியுருகின்றதது ஒரு கனவின் நிழலாய்.
Posted by
வருணன்
at
9:34 PM
நகக்கண்ணின் நுனியினின்று புறப்படுமந்த குறுந்தீண்டல் ஆதவனின் முகம் மறைக்கும் முகிலினத்தால் தரையில் படரும் மங்கலான வெயிலினைப் போல நீர்தேடும் வேராக தேடிடும் நகப்பூச்சுக் கால்கள் இணை கால்களை வேனிற் காலங்களில் கவிழும் நிழல் போல பரவுமந்த விழியின் மௌன மொழிகள் அருகிலிருக்கும் பொழுதுகள் அவ்வப்போது வாய்த்திடினும் பெண்ணில் வீழ்கின்ற நொடிகள் எப்போதாவதுதான் வாய்க்கின்றன அனுமானங்களுக்குள் அகப்படாமல் வழக்கம் போலவே.
Posted by
வருணன்
at
7:33 PM
கவிபுனைய ஆரம்பித்த காலந்தொட்டே என்னுள் நீ இருந்திருந்தால் இன்னும் புனைந்திருப்பேன் ஆயிரமாயிரம். கண்ணெதிரே பிரம்மாண்ட விருட்சமாய் வானம் மறைத்து கிளைகள் விரவிக் கிடக்கிறாய் இப்போது உன் நிழலடியில் நின்று உன்னுயரம் பார்த்து மலைத்துச் சலிப்பதிலேயே கழிகின்றதென் பொழுதுகள் என் கவிக்கனிகளை ருசிப்பவர்க்கு எப்படிச் சொல்ல முடியுமென்னால்... என் மரத்தின் வேர்கள் உன் நிலத்தினுள் புரையோடிக் கிடப்பதை?
Posted by
வருணன்
at
7:21 PM
அடுத்தது... ஏதாவது சொல்... என்றழகாய் உதிர்ப்பாய் மூன்றே வார்த்தைகளை அவைகளோ தம் கைகோர்த்து உலையில் விழுந்துருகி சாவிகளாகி இதயப் பூட்டினைத் திறந்திடும். நீயுதிர்க்கும் இவ்வார்த்தைகளென்ன என் மன அணையின் மதகுகளை உயர்த்தும் தாழ்களோ? உனக்காகவே பிறவியெடுத்தது போல் வழியும் வார்த்தைகள் உன்னில் முக்தியடையாது எங்கே செல்லும்?! விழிகள் வழியாய் கைபேசியினின்று வந்த வார்த்தைகள் தடம் மாறி தற்போது செவி வழி நம் சுயம் சேர்கின்றன. முன்னிரவில் நம்மிடையே பறக்கத் துவங்கிய வார்த்தைப் பறவைகள் மூன்றாம் சாமத்திலும் பயணத்தை முடிக்க மறுக்கின்றன. பின்னிரவிலும் நட்சத்திர நண்பர்களோடு விழித்தபடி நாம் அறையின் மின்விசிறிகள் நமக்கு தோழர் தோழியராய் அருகிலில்லாத போதே தெரிகிறது நமது வாழ்வில் ஒருவர் மற்றவரது இருப்பின் தேவை. எங்கே நானிப்போது கேட்கிறேன்... ஏதாவது சொல்... !