நிசங்களின் காடு

Tuesday, March 5, 2013









வழிதடங்கள் யாவும்
முற்றிலும் சிக்கலானவை
எளிமையான வினொதங்களையுடையவை
நிசங்களின் காட்டில் உலவுதல்
மெய்யர்களுக்கெ சாத்தியம்.
அவர்களுக்கே தெரியுமதன் இருள் கவிந்த
ரகசிய பாதைகளும் மர்மத் தடங்களும்
காடு புதர்கள் மண்டியதோ இல்லையோ
புதிர்கள் மண்டியது.
கடப்பவரை விழுங்கிச் செரித்திடும்
புதைகுழிகள் ஏராளம்
தன் புதிர் முகத்தினை மட்டுமே
காட்டிடும் காடு எல்லா பொழுதுகளிலும்
எல்லையைக் கண்டவர் எவருமில்லை
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.

குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (04-03-13)
மின்னிதழுக்கு நன்றி. 

பிரதிநிதி

Monday, March 4, 2013


குழப்பங்கள் கருக்கொண்டு பிரசவித்த
சூன்யத்தினுள் கரைந்தபடி காலம்

தொப்புள்கொடி அறுபடும் முன்னரே
தாயையிழந்த பிஞ்சாய்
பற்றிக் கொள்வதற்கோரு விரல் தேடி
வீறிடுகிறது வறண்ட மனம்

பலநூறு பகலவனாய் சுட்டெரிக்கின்றன
இயலாமைகள் என் ஆகாயத்தை
ஏங்கித் தவிக்கின்றன
என் பாலைவன ஏக்கங்கள்

நிசியிலுறங்கா ஓநாயின் ஓலத்தோடு
கரைகிறதென் கதறல்
அருகிலிருக்கும் அரவத்தின் கிசுகிசுப்பில்
பயந்து ஒடுங்குகிறதென் சுயம்

என்னுடைய வாழ்வை
என் பயங்கள் வாழ்கின்றன.

குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (03-03-13)
இணைய இதழுக்கு நன்றி. 


பூக்களுதிர் காலம்

Friday, March 1, 2013






நீண்டு நெளிந்து செல்லும்
குருதிப் புனலில் குளித்தெழுகிறது
இத்தரணி
பூக்கள் நிறைந்த வனத்தில்
ஒவ்வொரு அநியாயத்திற்கும்
ஒவ்வொரு வஞ்சனைக்கும்
ஒவ்வொரு குரோதத்திற்கும்
ஒவ்வொரு காழ்ப்புக்கும்
ஒவ்வொரு துரோகத்துக்கும்- சிந்தும்
ஒவ்வொரு அப்பாவியின் துளி இரத்ததிற்கும்
ஒவ்வொரு பாவத்திற்கும்- வடிக்கும்
ஒவ்வொரு துளி ஏழையின் கண்ணீருக்கும்
ஒன்றென்ற கணக்கில் உதிரத் துவங்கின.
மெல்லத் துவங்கியது தரணியின்
பூக்களுதிர் காலம்
உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
முட்டித் துளிர்த்தது
நட்பெனும் ஒரு பூ
வையம் பூக்களின் காடானது
மீண்டும்.


குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை ( 01-03-13)
மின்னிதழுக்கு நன்றி.