சினிமா எனும் ரசவாதம் -Cinema Paradiso

Thursday, January 16, 2014


திரையரங்குகளில் சினிமா பார்ப்பது ஒரு சமூக நிகழ்வு. எல்லா மனிதர்களையும் அவர்தம் பேதங்களை மறந்து, இருளில் ஒளிரும் திரையின் முன்னே சில மணி நேரங்கள் இருக்கச் செய்வது சினிமா நிகழ்த்தும் மாயம். நமது பால்யத்தின் நினைவறைகளில் நிச்சயம் நமக்கு பிரியமான ஒரு திரையரங்கைக் குறித்த அனுபவம் ஒளிந்திருக்கும்.

இளமையில் ஒரு இத்தாலிய கிராமத்தில், ஒரு சிறுவனுக்கு அவ்வூரின் திரையரங்கில் ஆப்பரேட்டராக பணியாற்றும் Alfredo நண்பராகிறார். திரைப்படங்கள் அவர்களது நட்பினை இறுகக் கட்டுகிறது. கைகூடாத காதலோடு பதின்வயதில், அவரது சொற்படி அவன் தன் ஊரை விட்டு ரோம் நகருக்குச் செல்கிறான். முப்பது வருடங்கள் கழித்து வாழ்வின் பகடை அவனை ஒரு திரைப்பட இயக்குனராக்கியிருக்கிறது, ஆல்பெரேதோவின் மரண செய்தி அவனை மீண்டும் அவனை சொந்த ஊருக்கு வரவழைக்கிறது. மரண செய்தியை சொன்ன அவனது தோழி அவர் யாரென வினவ அவனது மனம் பின்னோக்கி ஞாபக நதியில் நீந்தத் துவங்கிகிறது. 

அதன் வழியே நட்பும் காதலும், இழப்பும் வலியும் நம் கண் முன்னே விரிகிறது. ஆல்பரேதோவிற்கு பிறகு பராமரிக்க ஆளின்றி அத்திரையரங்கம் இடிக்கப்படுகிறது. திரை அரங்கங்களுக்கும் ஒரு சினிமா ரசிகனுக்கும் உள்ள ஆத்மார்த்தமான காதல் தளும்பும் பிணைப்பை சொன்ன ஆகச் சிறந்த படம் நான் பார்த்த வரையில் இதுதான். உங்களுக்கு சினிமாவின் மீது காதலிருப்பின் இது உங்கள் மனதை விட்டு அகலாது, என்றும்.

Movie : Cinema Paradiso (1988)
Language : Italian
Director : Giuseppe Tornatore

வாழ்வெனும் வரம் - It's a Wonderful Life










ஒருவரது வாழ்க்கையில் ஆகச் சிறந்த வரம் அவருக்கு வாய்த்த வாழ்க்கை தான். உலகெங்கும் வாழ்க்கையை கொண்டாடும் திரைப்படங்களில் தனி இடத்தைப் பெற்ற திரைப்படம் “ It's a Wonderful Life". மனிதர்கள் பெரும்பாலும் தங்களை சாதாரணமானவர்களாகவும் தங்களால் செய்யப்பட்டவை ஒன்றுமே முக்கியத்துவம் இல்லாதது எனும் பாவனையில் தங்கள் வாழ்க்கையே வெறுமையாய் உணருகின்றனர். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் சாதரணமாக செய்யும் பல செயல்கள் எப்படி சகமனிதரின் வாழ்வின் திருப்புமுனைகளாய் அமையும் என்பதே இப்படத்தின் திரைக்கதையின் அடிநாதம். வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக பார்க்கும் விதத்தில் வாழ்வு குறித்த நம் புரிதலை மாற்றும் இப்படம். பிற்காலங்களில் ஹிட்சாக்கின் ஆஸ்தான நாயகனான James Stewart தன் இயல்பான நடிப்பால் இப்படைப்பிற்கு உயிரூட்டியிருப்பார். படத்தின் வசனங்கள் மிகப் பிரபலமான மேற்கோள்களாக இன்றளவும் உள்ளன.

Movie : It's a Wonderful Life (1946)
Language : English
Director : Frank Capra

அவரவர் மழை

Monday, October 21, 2013










சாம்பல் நிறத்து மழை
செயற்கையின் புழுதி கழுவி
இயற்கையை குளிப்பாட்டுகிறது
புகை போல கிளர்ந்து நெளிந்து
அந்தரத்தில் நீரின் நடனம்
காற்றின் இசைக்கேற்ப
பிஞ்சுக் கரங்களில் விழுந்து அவிழும்
நீர்த்திவலைகள் முகத்தில் ஓவியம் தீட்டுமாறு
சாரலை ரசிக்கும் மகள் மனத்திரையில் வருகிறாள்
அவரவர்கேயான அவசரங்கள், காரணங்கள் சுமந்து
மழை கோட்டுக்குள் மறைந்து கொள்ளும் முகங்களை
சுமக்கும் வாகன நேரிசலுக்கு மத்தியில்
தற்செயலாய் தொடர்கிறது பார்வை
சிமெண்ட் குழாயினுள் ஒண்டும்
தெருவோர சிறுமியொருத்தியை
ஒரு மகளுக்கு இசைவான மழை
இன்னொரு மகளுக்கு வதையாவது புரிகிறது
முகத்தில் வழியும் துளிகள் கனக்க

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட இறக்கை
இதழுக்கு நன்றி.