இரவு- II

Sunday, August 19, 2012


 04.
சிந்தனை வடிந்த
இரவொன்றில்
காற்றில் படபடக்கிறது
வயிறு நிறைந்த காகிதமொன்று
மூடிய எழுதுகோலுக்கும்,
கவிழ்க்கப்பட்ட மூக்குக் கண்ணாடிக்கும்
அடியினில்...

எரிந்து கொண்டேயிருக்கிறது
மேசை விளக்கு
படுக்கையில் நான்
அணைந்த பிறகும்.

05.
 
உனக்கும் எனக்குமிடையேயான
விழி வழி தொடர்பில்
நகரும் பகல்
வார்த்தைகளால் பரிமாறிட முடியாததாய்
மௌனத்தில் கரைகின்றது அன்பு
மொழிகள் மரித்த மௌனத்தின் மேட்டில்
வெளிச்சத்தை அடைகாத்து
இருள் போர்த்தி உறங்க ஆரம்பிக்கிறது
நம் இரவு.     
குறிப்பு: இக்கவிதைகளை வெளியிட்ட வல்லமைக்கு(08-08-12)
நன்றி.



இரவு- I

Monday, August 13, 2012

01.

காலத்தச்சன் விரல்களுக்கிடையில்
பற்றிய தூரிகையில்
ஒரு அடர்கனவின்
நிழல் தொட்டு
வரைய ஆரம்பித்த
அந்தியின் படம்
இரவானது.
 
02.

ஒவ்வொரு கணமும்
ஒரு வாழ்க்கை
ஒவ்வொரு கனவும்
ஒரு விதை
ஒவ்வொரு இரவும்
ஒரு கவிதை.



 
03.

ஒரு இரவினைப் புரிதல்
அத்துணை எளிதானது.
யாருடைய உதவியை நாடவோ,
எப்புத்தகத்தையும் துணைக்கு
வருமாறு கோர வேண்டிய
அவசியங்கள் இல்லை..
ஒரு நங்கையைக் காட்டிலும்
இரவினைப் புரிதல் எளிதானது.
விரவும் இருட்டில் ஏதும் செய்யாது
ஏதும் நினையாது
சும்மா இருப்பதே போதுமானது.

குறிப்பு: இக்கவிதைகளை வெளியிட்ட 
வல்லமை ( 08-08-12) இணைய தளத்திற்கு
நன்றி.

முடிவென்பதெல்லாம் முடிவல்ல

Tuesday, August 7, 2012









கைகளில் ஏந்திய
கொசுக்கள் கொல்லும்
மட்டையுடன் நிற்கிறோம்
பின் மாலைகள்தோறும்
தைமூரின் படையினை
எதிர்கொள்ளக் காத்திருக்கும்
முகமது ஷா துக்ளக்கின்
முனைப்புடன்.
உயரப் பறந்து தப்பிக்கும்
போர் விமானங்களை போல
உயிர் பயத்தில் ஓடுமவைகளை
மட்டையை வளைத்து,
மடித்துச் சுழற்றி லாவகமாய்
தகனமாக்குகிறோம் கம்பிகளுக்கிடையே
எல்லாம் முடிந்ததென
இறுமாந்து அயரும்
நடுநிசியில் தத்துவம் பயின்ற
ஒற்றைக் கொசு
டார்வினியம் போதிக்கிறது
காதுகளுக்குள் ரீங்காரமாய்.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட  உயிரோசை ( 06.08.12) 
இணைய  இதழுக்கு நன்றி. 
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5847