முத்தத் தத்துவம்

Wednesday, October 12, 2011




உனதிருப்பையும் எனதிருப்பையும்
துறந்து வேரற்று அந்தரத்தில்
உதடுகள் மட்டும் அருகருகே
அவைகளுக்கிடையில் ஒடுங்கும் உலகனைத்தும்
அவைகளே ஓர் உலகமாயும்...
காமத்தின் வாசமறியும் கணங்களில்
மனம் பிளந்து எழுகின்றது
விலங்கறுத்த விலங்கு ஒன்று
உதடுகளில் முளைத்த கண்களனைத்திற்கும்
இணையைத் தவிர வேறேதும் தெரியவில்லை.
இடையிடையே அரவமாய் நாவுகள் அவ்வப்போது
நிலத்தினை நனைத்திட...
நிசி அகவும் பொழுதில்
தூரமிழக்கும் இரு உலகங்களிடையே
காத்திருக்கிறது ஒரு பிரளயம்.
சிற்றின்பத்தில் மதி தொலைக்காதே
மானிடப் பதரே...
கதறும் போதகனின் குரல் கடக்கிறது
செவிகளற்ற உலகத்தினை.
தன்னைத் தொலைக்க கற்றுத் தருகிறது தியானம்
எது செய்கிறாயோ
அதுவாய் இருவென்கிறது சென்.
கவலை கொள்ளாய் இணையே
நாம் தவணை முறையில்
ஞானிகளாகிக் கொண்டிருக்கிறோம்.

இரவை வென்ற விழிகள்

Monday, September 26, 2011




துஞ்சாத கண்களும்
துயிலாத இரவும்
உருட்டிய பகடையில்
விழுந்தது முதல் தாயம்

ஆட்டத்தை துவங்கியது இரவு.

உறங்காத இரவிற்குள்
சலனமின்றி உறங்கிய
கனவு ஏணிகள் வழியாய்
அசுரப் பாய்ச்சலில் நகர்வு.

எதிர்வந்த அரவங்களின்
வாய்தனில் அகப்படாமல்
தாண்டித் தாண்டி
தொடர்ந்தன கண்கள்

மூன்றாம் யாமத்தைத் தாண்டியும்
வெற்றி தோல்வியின்றி
தொடர்ந்த உருட்டல்களில்
எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு
இறுதியாய்
வைகறையின் வாயில் சிக்குண்டது.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(25.09.11)
இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

நான் நிறையாத என் குறிப்பேடு

Friday, September 23, 2011




திறந்தபடியே
இன்னமுமென் குறிப்பேடு

காற்றினில் அலைகின்றது அருகிருக்கும்
அகல் விளக்கின் திரிக் குழாயினில்
ஒட்டிக் கொண்டிருக்கும் துளி சுடர்

தலை சாய்த்து ஓய்ந்திருக்கிறது
மைப்புட்டியிலுள்ள மயிற்பீலீ

என்னைக் குறிப்பெடுக்க எத்தனித்து
இறுதியில் பக்கம் முழுமையும்
நிறைந்த உன்னை
தாடை தாங்கும் கைகளுடன்
இமைக்காமல் பார்த்தபடி நானிருக்க
படபடக்கும் தாள்களின்
வெற்று பக்கங்களோ
எனைப் பார்த்து நகைக்கின்றன.