உன் சாணக்கியம்

Monday, September 19, 2011




வார்த்தைகளால் என்னை விஞ்சிட
முடியாதென்றுனக்கு
தெரிந்ததாலோ என்னாவோ
உன் கயல்விழிகளின்
ஒற்றைப் பார்வையிலென்னை
மௌனியாக்குகிறாய்
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும்
உறைந்த என் மௌனத்தின்
வெடிப்புகளினின்று கசிந்து
வழிந்தபடி என் காதல் மட்டும்...
வார்த்தைகளற்றுப் போன நம் உலகில்
பிறகெப்படிப் பிறந்திடும்
வெற்றிகளும் தோல்விகளும்?

அநுதினமும்

Tuesday, September 13, 2011




அன்னையர் தினம்
காதலர் தினம்
நண்பர்கள் தினம்
தந்தையர் தினமென
இன்னும் பிற தினங்களுண்டு
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
பொம்மைகள், இனிப்புகள்
இத்யாதிகளென
இன்னும் பல உண்டு...
எனக்கோ எல்லாமுமாய் நீயிருக்க
எத்தினத்தில்
உனக்கிவைகளை நானளிப்பேன்?!

யாதுமாகிய யான்

Monday, September 5, 2011




அவள் விழி குளத்தினுள்
நீராடும் என்னையும்
அதன் கரையோரங்களில்
தளும்புமவள் கனாக்களையும்
அன்னல் யான் நோக்கினேன்
அவள் நோக்கா தருணங்களில்

மஞ்சமென நினைத்தென்
மடிதனில் நீ கிடக்கையில்
நின் விழிதனில் மின்னும்
அதே கனவுகளும் ஆசைகளும்

யாதுமானவன் எனக்கு நீயென
வாழ்ந்திடுமென் சகியுனக்கு
வேறெதனைச் சிறப்பாய்
அளித்திட முடியும்
என்னைத் தவிர...?