மடி வீழ்தல்

Thursday, December 9, 2010



பெண்ணால் அழிந்த ராஜ்ஜியங்கள்
குறித்த சரித்திர உண்மைகள் புரிகிறது
உன் மடி வீழ்தலின் போது
மர்மம் தளும்பும் உன் அக உலகங்களின்
தாழ் திறந்து கதைக்கிறாய்
ஓசைகளில்லா விழி மொழியில்.
என் பிரம்மச்சரியப் பயணத்தின்
வேகத் தடைகளை சுமந்தவாறு
பின்புறம் கைகளூன்றி அமர்ந்திருக்கிறாய் நீ.
காது மடல்களில் வெம்மைகூட்டும் உன்
நாசிகளைத் தொடர்ந்து
ஈரமான குளிர் நாவின் தீண்டல்கள்
சிருஷ்டிக்கின்றன என் பிரபஞ்சத்தில்
எண்ணவியலா நட்சத்திரங்களை
கணப்பொழுதில்.
இயற்பியல் விதிகளை உடைத்தெறிகிறாய்
பனி முத்தங்களால் என்னை
சூடேற்றும் ஒவ்வொரு முறையும்.
கடந்தமுறை தவறவிட்ட
சொர்க்கத்திற்கு வழி காட்டும்
நகக்குறி வரைபடங்களை
மீண்டும் வரையத் துவங்குகிறாய்.
நானோ சிறகு விரித்து
தயாராகிறேன்
இன்னுமொரு பெரும் பயணத்திற்கு.

அவனறியா பொழுதில்

Monday, December 6, 2010



அவனுக்கும் வனாந்தரத்திற்கும்
தீராத போட்டி
ஆக்கிரமிப்பதில்
பேராசை வாளெடுத்து
மூளை கூர்தீட்டி
ஆட்கொண்டான் வனம் முழுவதையும்
ஒரு மரமும்
ஒரு கிளையும்
ஒரு இலையும் தப்பவில்லை.
ஒரு புல் கூட...
தாக்குப் பிடிக்கத் திராணியற்றுப் போனாயென
பழிப்புக் காட்டி நகைத்தான்
மீதமிருந்த வனமதிர
எதிர்க்காதது போலிருந்த வனமோ
தன் மாய இருள் நிறைத்து
அரூபமான தன் கிளைகள் பரப்பி
வேர் பிடித்து
செழிக்க ஆரம்பித்திருந்தது
அவன் அகத்தே
அவனறியா கணம் தொட்டே.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.12.10) இணைய தளத்திற்கு நன்றி.

நறுமணமான பாடலொன்று

Wednesday, December 1, 2010



இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (28.11.10) இணைய தளத்திற்கு நன்றி.