எல்லையற்ற கருணை கமழும் அகத்தே ஒரு பொழுதில் வெறிகொண்டு தசை திண்ணத் துடிக்கும் ஆறாத வேட்கையொன்று பிறிதொரு பொழுதில் எங்கோ நிகழும் ஏதோ ஒரு கொடுமைக்காய் கசிந்துருகும் மலர் மனது இரவின் வெம்மையில் தகிக்கும் தனிமை புணர்ந்தடங்கும் வேட்கைகள் வளர்த்தெடுத்த அரூபமான பெண்மையொன்றை மிருகம் தணிந்து மனிதம் என்னுள் மீண்டும் மலருமந்த தருணத்தில் மடிந்து உயிர்ப்பேன் இன்னொரு முறை அடங்கும் வரை அசரீரியாய் உள்ளிருந்து ஒலிக்குமந்த ஒற்றை கேள்வி எல்லா தருணங்களிலும்.
ஆழமாய் சுவாசிப்பேன் உன் முகவரியாகும் வாசனைகள் நாசிக்கு பரிச்சயமாகையில் உனக்கேயான பிரத்தியேக மென்மையுடன் எக்கரங்கள் வருடினாலும் அனிச்சையாய் பற்றிக் கொள்வேன் அவற்றை இறுக்கமாய் வெறும் ஊனாய் மட்டுமே இவன் மூளையிலமர்ந்துள்ளேனோ என்றயங்கொள்ளாதே ஊன் தாண்டியுன் சுயத்தைச் சுகிக்கமுடியுமென்னால் எங்கே முடிகின்றதென நீ நினைக்கிறாயோ அங்கிருந்து பிரவாகமெடுக்கிறது உன் மீதான என் பிரியங்கள்.
1 வானத்தை விடவும் பெரிய வானவில் சாத்தியமா என்ன? என்னை விடவும் பெரிதாக எனக்குள் நீதான் இருக்கிறாய் !
2
மேகத்தை விட மென்மயானதொன்று நிலவின் ஒளியினும் குளுமையானதொன்று மழைத் தூறலை விட மயக்கும் இசை ஒன்று தாயின் அன்பை விஞ்சும் அன்பொன்று மழலையின் சிரிப்பை தாண்டிய பரிசுத்தமொன்று புல்நுனி பனித்துளியை விட அழகானதொரு கவிதை இவைகள் கூட சாத்தியப்படலாம். உன்னைவிடவும் மனதுக்கு இதமான இணக்கமான ஒருத்தி... ம்... !?
எழுதிக்கொண்டேயிருக்கிறேன் உனக்கு அனுப்பாத கடிதத்தை எவ்வளவு எழுதிய பிறகும் சொல்வதற்கு ஏதோவொன்று மிச்சமாய் இன்னும்… முடித்திட முடிவு செய்யும் ஒவ்வொரு கணத்திலும் தொடுவானில் புள்ளி பிம்பமாய் மினுக்கும் உன்னிடம் சேர்ப்பிப்பது பற்றிய என் ஐயங்களுக்கு பதில் தேட முனையாது எழுதியபடியே இருக்கிறேன்.