குலமரம் செழிக்க நீர்தேடும் வேராய் அந்நிய தேசம் படர்ந்தேன் விலை பேசப்பட்டன என் சிறகுகள் இப்போது அயலான் என் சிறகுகளால் காது குடைந்து சுகிக்கிறான் அழகிய சீமாட்டிகள் தத்தமது தொப்பிகளை அலங்கரித்துக் கொள்கின்றனர் இறகுகள் ஒவ்வொன்றாய் பறிபோக சிறகுகள் இழந்தேன் கிடைத்த கூலியில் உயரமான மரங்களில் கூடுகளமைத்தேன் என் குலப் பறவைகள் களித்திருக்க தூர தேசத்தில் சிறகுகளிழந்த நான் மடிந்து போவேன் ஒரு நாள் எம் கொடிகள் இங்கே தழைக்க.
காற்றினில் மிதந்தாடும் காகிதங்கள் பறக்காதிருக்க இரு முனைகளையும் இறுகப் பிடிக்கின்றாய் உன் சுண்டு விரலாலும் சுட்டு விரலாலும் உன் மென்விரல் கரைகளுக்கு மத்தியில் அசைவாடுகின்றன இக்கணத்தில் என் கவிதைகளும்,புனைவுகளும் கூடவே நானும்.
முடிவில்லததொரு தொடர்பாடலைப் பாடியபடி பிறை நிலாக்களை நறுக்கி நறுக்கி நீயுன் விரல்களின் உயரத்தைக் குறைத்தபடியிருக்கிறாய் நானோ ஒரு மாளிகையின் பலகணியில் பழகிய உதடுகளுடனும் பழகாத முத்தங்களுடனும் நீ வருவாயென எதிர்பார்திருக்கும் ஒவ்வொரு காத்திருப்பையும் சட்டமிட்டு என் மாளிகையின் சுவர்களில் தொங்கவிட்டபடியிருக்கிறேன் தூரத்தில் தெரியும் உன் நிழலுருவை வருந்தியழைக்கும் என் அழைப்புகள் தவழ்ந்து மேகமாகி உன் மேலே நிலைக்கின்றன நீயோ மழையாய்ப் பொழியும் என் விண்ணப்பங்களில் நனையாது கால்களைச் சுற்றிக் குழையும் செல்ல நாயொன்றை வாரியணைத்து முத்தமிடுகிறாய். பகலும் இரவும், இரவும் பகலும் கடந்திட்ட பின்னரும் சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது உன்னுடைய தொடர் பாடல்.
நானுனக்கு பரிசளித்த தேவதையை உடனெடுத்துச் செல்வாயா என்ற என் ஐயத்தை வார்த்தைப் புறாக்கள் வாயிலாக தூது அனுப்பினேன் இல்லையென்ற பதிலைக் கட்டி திருப்பியனுப்பினாய் அதன் பிஞ்சு கால்களில் நீ கண்ணுராது உன் வரவேற்பறையை அலங்கரித்திடும் அத்தேவதையின் பிம்பம் என் மன வீட்டின் இருளினுள் அசைவாடிக் கொண்டிருக்கிறது தொட்டு வருடிய உன் சில நொடி ஸ்பரிசத்தின் சிலாகிப்புகளை அசைபோட்டபடி...
உனக்காய் என்னுள் உதித்த வார்த்தைகளையெல்லாம் இரகசிய பெட்டகங்களில் சேமிக்கின்றேன் நீயோ உன் மௌனத்திற்குள் ஆழக் குழிதோண்டி சேமிக்கின்றாய் எனக்கான வார்த்தைகளை வார்த்தைகள் பெருத்து என் பெட்டகங்களின் விரிசல்களினூடே கசிகின்றன - உன் மௌன நிலத்தில் மண்டிய வார்த்தைகளோ சிருஷ்டிக்கின்றன ஒரு விசித்திர கானகத்தை உடைந்து சிதறட்டுமென் சுவர்கள் வெந்து தணியட்டும் உன் காடு.